2016 செப்.9க்கு முன் சட்டப்படிப்பை முடித்தவர்கள் சிவில் நீதிபதிகள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்: டிஎன்பிஎஸ்சிக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  சட்டப் படிப்பில் 2016ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதிக்கு முன் பட்டம் பெற்றவர்கள் சிவில் நீதிபதி தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 25ம் தேதி வரை அவகாசம் வழங்க தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை உயர்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் 176 சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த செப்டம்பர் 9 ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது. நவம்பர் 21ம் தேதி எழுத்து தேர்வும்  நடைபெறும் என அழைக்கப்படும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், அறிவிப்பாணை வெளியிடப்பட்ட செப்டம்பர் 9ம் தேதியில் இருந்து மூன்று ஆண்டுகளுக்குள்  சட்டம் படித்தற்கான பட்டத்தை பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.இதை எதிர்த்து பத்மாவதி, லட்சுமி சண்முக பிரியா உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அதில், கடந்த 2016 செப்டம்பர் 9ம் தேதிக்கு முன் சட்ட பட்டம் பெற்ற தங்களது விண்ணப்பம்  நிராகரிக்கப்பட்டதாகவும், 2016 செப்டம்பர் 9ம் தேதிக்கு பின் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பம் ஏற்கபட்டது, பாரபட்சமானது என்றும் மனுக்களில் தெரிவிக்கபட்டிருந்தது.

இந்த வழக்குகளை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி வினித் கோத்தாரி மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு, 2016ம் ஆண்டு சட்டபடிப்பை முடித்து செப்டம்பர் 9ம் தேதிக்கு முன்பு சான்றிதழ் பெற்றவர்களும் விண்ணப்பிக்க ஏதுவாக, வரும்  25ம் தேதி இரவு 11.59 வரை ஆன்லைன் விண்ணப்பத்திற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டது.மேலும், இந்த உத்தரவு குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் உயர் நீதிமன்ற இணையதளங்களில் வெளியிடவேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Related Stories: