காவலர் வீரவணக்க நாளையொட்டி டிஜிபி அலுவலகத்தில் முப்படை வீரர்கள் மரியாதை: துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி

சென்னை: காவலர் வீர வணக்க நாள் நிகழ்ச்சியையொட்டி தமிழக காவல் துறை தலைமை அலுவலகத்தில் டிஜிபி திரிபாதி, முப்படை வீரர்கள் உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.கடந்த 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்’ என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர்  உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு  முழுவதும் பணியின்போது தங்களின் இன்னுயிர் நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 21ம் நாள் ‘‘காவலர் வீர வணக்க நாள்’’ ஆக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன்படி சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நாடு முழுவதும் பணியின் போது வீர மரணமடைந்த 292 காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, முப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வீரர்கள், சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.ேக.விஸ்வநாதன், காவல் உயரதிகாரிகள், ஓய்வு பெற்ற உயரதிகாரிகள் மற்றும் முக்கிய  பிரமுகர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் காவலர் வீர வணக்க நாள் நினைவுத் தூண் அருகே மலர்வளையம் வைத்து, மவுன அஞ்சலி மற்றும் துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர்.இதன் காரணமாக, சாந்தோம் நெடுஞ்சாலை முதல் ராஜாஜி சாலை வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதைதொடர்ந்து, காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு பணியின் போது உயிரிழந்த காவல் ஆய்வாளர் பெரியபாண்டி இல்லத்திற்கு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில்  ெசன்று அவரது படத்திற்கு மலர்தூவி அஞ்சலி  செலுத்தினார்.

Related Stories: