சென்னையில் உள்ள நீதிமன்றங்களுக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு வழங்க முடியுமா?: ஐகோர்ட் குழு அறிக்கை தர நீதிபதிகள் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டுமென தலைமை நீதிபதி அமர்வில் வாயில் கருப்புத்துணி கட்டி  போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து,  சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள  உயர் நீதிமன்ற கட்டிடத்திற்கு  சிஐஎஸ்எப் பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.அதன்படி, 2015 நவம்பர் 16 முதல் உயர் நீதிமன்றத்துக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்த பாதுகாப்பு ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், வரும் அக்டோபர் 31ம் தேதியுடன் பாதுகாப்பு முடிய உள்ளது. இந்நிலையில், சிஐஎஸ்எப் பாதுகாப்பு தொடர்பான வழக்கு  பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி, நீதிபதி சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன், சிஐஎஸ்எப்  பாதுகாப்பு இல்லாத இடங்களில் கொலை முயற்சி, போராட்டங்கள் போன்றவை நடைபெற்று வருவதால், உயர் நீதிமன்ற வளாகம்  முழுவதும் நிரந்தரமாக சிஐஎஸ்எப்  பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான  அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், சென்னை உயர் நீதிமன்றம் முழுவதும் சிஐஎஸ்எப்  பாதுகாப்பு கொண்டு வந்தால், வழக்கு தொடர வரும் மக்கள் வக்கீல்கள் அறைகளுக்கு வருவது சிரமமாகிவிடும்  என்றார்.அப்போது, வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜராகி, குடும்ப நல நீதிமன்றத்தில் தொடர்ந்து பிரச்னை வருகிறது. நீதிமன்றத்திலேயே வழக்கு தொடர வந்த கணவருக்கும் மனைவிக்கும் பிரச்னையாகி மனைவியை கணவர் கத்தியால் குத்திய  சம்பவமும், வக்கீல் அறையில் தந்தையை மகன் குத்திய சம்பவமும் நடந்துள்ளது. எனவே, சிஐஎஸ்எப் பாதுகாப்பை உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் அமைக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் பல இடங்களில் சோதனை நடப்பது  வக்கீல்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அனைத்து வாயில்களிலும் சிஐஎஸ்எப் சோதனை நடத்துமாறு உத்தரவிட வேண்டும் என்றார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தின் சிஐஎஸ்எப்  பாதுகாப்பை மறு உத்தரவு வரும் வரை நீடித்து உத்தரவிட்டனர். ேமலும், சென்னையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சிஐஎஸ்எப் படை வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாக பரிசீலித்து 3 மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற பாதுகாப்பு  குழுவுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: