டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களுக்கு 100 முதல் 10 லட்சம் வரை அபராதம்

* 12 வகையாக பிரித்து புதிய ஆணை வெளியீடு

* மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவு

சென்னை: டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் இருக்கும் கட்டிடங்களுக்கு 100 முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை  மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 500க்கு மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், டெங்கு காய்ச்சல் ஏற்பட காரணமாக உள்ள ஏடிஸ் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றின்  உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்படும்.   மேலும், சென்னை மாநகராட்சி பகுதியில் 6,913 பூட்டிய வீடுகளும், 25,287 திறந்தவெளி இடங்களும் 7,661 கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களை தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொசு உற்பத்தியாகும் நிலையில் உள்ள  காலியிடங்களை சுத்தப்படுத்த, சம்பந்தப்பட்ட நில உரிமையாளருக்கு அறிவுறுத்த வேண்டும். அவர் சுத்தப்படுத்தாவிட்டால் மாநகராட்சி சார்பில் சுத்தப்படுத்தி அதற்கு வழக்கமாக மாநகராட்சி தரப்பில் வசூலிக்கப்படுவதை விட 2 மடங்கு  கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி இதுவரை 45 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ெடங்கு கொசு உற்பத்தியாகும் நிறுவனங்களுக்கு விதிக்கும் அபராத தொகையை மாற்றியமைத்து  சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். இதன்படி குடியிருப்புகளுக்கு முதல் நோட்டீஸ் வழங்கப்படும். 2வது முறை 100ம், 3வது முறை 200ம்  அபராதம் விதிக்கப்படும். அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முதல்முறை  500ம், 2வது முறை 5000ம், 3வது முறை 15 ஆயிரமும் விதிக்கப்படும். சிறிய கடைகளுக்கு முதல் முறை 500ம், 2வது முறை 2 ஆயிரமும், 3வது முறை 5 ஆயிரமும் விதிக்கப்படும்.

1000 மாணவர்களுக்கு கீழ் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு முதல் முறை 5 ஆயிரம், 2வது முறை 25 ஆயிரம், 3வது முறை 50 ஆயிரம் விதிக்கப்படும். 1000 மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு முதல் முறை 10 ஆயிரம், 2வது  முறை 50 ஆயிரம், 1 லட்சம் விதிக்கப்படும். 2 நட்சத்திர விடுதிகளுக்கு முதல் முறை 5 ஆயிரம், 2வது முறை 10 ஆயிரம், 3வது முறை 25 ஆயிரம் விதிக்கப்படும். வணிக வளாகம் மற்றும் அரசு கட்டிடங்களுக்கு முதல் முறை 10  ஆயிரம், 2வது முறை 25 ஆயிரம், 3வது முறை 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.இதேபோன்று, 5 ஆயிரம் சதுர அடிக்கு குறைவாக உள்ள கட்டுமான நிறுவனங்கள், 5 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கட்டுமான நிறுவனங்கள், 50 படுக்கைக்கு கீழ் உள்ள மருத்துவமனைகள், 50 படுக்கைக்கு மேல் உள்ள மருத்துவமனைகள்  உள்ளிட்டவைகளுக்கும் தனித்தனியாக அபராதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐசிஎப்புக்கு 1 லட்சம் அபராதம்

டெங்கு உற்பத்தியாகும் வகையில் நீரை தேங்க விட்டதாக ஐசிஎப் பணிமனைக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ₹1 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். இதேபோன்று ஜூமோட்டோ நிறுவனத்திற்கும் ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: