2 தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விக்கிரவாண்டி-84.36%, நாங்குநேரி-66.35% : புறக்கணிப்பால் நாங்குநேரியில் மந்தம்

சென்னை:  தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குேநரி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக முடிந்தது. விக்கிரவாண்டியில் 84.36 சதவீதமும், நாங்குநேரியில் 66.35 சதவீதமும் பதிவானது.  113 கிராமங்கள் புறக்கணிப்பால்  நாங்குநேரியில் மந்தமான வாக்குப்பதிவு காணப்பட்டது. தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகள் மற்றும் புதுவையில் காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு கடந்த மாதம் 21ம் தேதி வெளியானது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில்  புகழேந்தி, அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வன், நாம் தமிழர் கட்சி மனோகரன், திரைப்பட இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட 12 பேர் போட்டியிட்டனர். விக்கிரவாண்டியில் 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 10 இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறால்  வாக்குப்பதிவு அரை மணி நேரம் தாமதமாக  தொடங்கியது. காலையில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல்  பொதுமக்கள் நீண்டவரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்தனர். காலை 9 மணி நிலவரப்படி 12.84 சதவீத வாக்குகளும், 11 மணி நிலவரப்படி 32.54 சதவீத வாக்குகளும், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 54.17 சதவீத வாக்குகளும் பதிவானது. மாலை 5 மணி நிலவரப்படி 76.41 சதவீத வாக்குகள் பதிவானது. மாலை  6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் மொத்தம் 84.36 சதவீதம் வாக்குகள் பதிவானது.

நாங்குநேரி தொகுதி: நாங்குநேரி தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரனும், அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜநாராயணன்  உட்பட 23 பேர் போட்டியிட்டனர்.  வாக்குப்பதிவுக்காக 168 இடங்களில் 299 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஏர்வாடி பகுதியில் சிறிது நேரம் பெய்த மழையை பொருட்படுத்தாது ஆர்வத்துடன் ஆண்களும், பெண்களும் வாக்களித்தனர். வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் 2  வாக்குச்சாவடியில்  வாக்குப்பதிவு சிறிது நேரம் தடைபட்டது.தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வெளியிட வலியுறுத்தி 113 கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் காரணமாக பல கிராமங்களில் வாக்குப்பதிவு மந்தமானது.

ஏர்வாடி கோவில் வாசல் பகுதியில் பூத்திற்கு செல்லும் வாக்காளர்களை வழிமறித்து அதிமுகவினர் பணம் விநியோகம் செய்வதாக திமுக நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர். நாங்குநேரியில் ஒரு காரில் பணம் வைத்திருந்த சென்னையைச்  சேர்ந்த சத்யானந்த் என்பவரிடமிருந்து ரூ.1.76 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் அதிமுக எம்எல்ஏ ஒருவர் காரில் வந்ததாக கூறப்பட்டது.

நெல்லை அருகே பர்கிட்மாநகரத்தில் பண பட்டுவாடா செய்ய முயன்ற வாகனம் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர். எனினும் அசம்பாவிதங்கள் இன்றி அமைதியான முறையில் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. இறுதியில் 66.35  சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு நெல்லை அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டன.புதுவை காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜான்குமாரும், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புவனா என்கிற புவனேஷ்வரன் போட்டியிட்டனர். இங்கு வாக்குப்பதிவு 69.44 சதவீதம் வாக்குப்பதிவானது.

அமைதியான முறையில் நடந்தது தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு சென்னை தலைமை செயலகத்தில் நேற்று மாலை நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று  முடிந்துள்ளது. விக்கிரவாண்டியில் 84.36 சதவீதமும், நாங்குநேரியில் 66.10 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளது. 2016 தேர்தலுடன் ஒப்பிடும்போது 81.25 விக்கிரவாண்டியில், நாங்குநேரியில் 71.92 சதவீதம் இருந்தது. இறுதி வாக்குப்பதிவு நிலவரம்  இன்று காலை அறிவிக்கப்படும். தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி, முறைப்படி சுதந்திரமாக தேர்தல் நடத்தினோம். யாரும் தேர்தலை புறக்கணிக்க கூடாது என்றுதான் நாங்கள் பார்த்தோம். சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடாது என்பதிலும்  நாங்கள் முக்கியத்துவம் அளித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: