தனியார் மருத்துவமனை ஐசியு வார்டில் திடீர் தீ விபத்து: ஐந்து மாத குழந்தை பரிதாப பலி,..6 குழந்தைகள் தீக்காயங்களுடன் மீட்பு

திருமலை: ஐதராபாத்தில் தனியார் மருத்துவமனை ஐசியு வார்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 மாத குழந்தை பரிதாபமாக பலியானது. மேலும் 6 குழந்தைகள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள எல்.பி. நகரில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்ள சிறு குழந்தைகளுக்கான ஐசியு வார்டில் 42 குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை ஐசியு பிரிவில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குழந்தைகளின் உறவினர்கள் உடனடியாக குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் சூர்யா பேட்டையை சேர்ந்த 5 மாத பெண் குழந்தை தீக்காயமடைந்து பரிதாபமாக இறந்தது. ஐதராபாத் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர்.  

மேலும் 6 குழந்தைகள் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு அதே பகுதியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பல குழந்தைகளுக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில் அவர்களையும் பல்வேறு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக இதே போன்று பலமுறை மின்கசிவு ஏற்பட்டதாகவும் ஆனால் மருத்துவமனை நிர்௳ாதச்சின் அலட்சியத்தின் காரணமாகவே இந்த அளவிற்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் குழந்தைகளின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கிடையே தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் இதுதொடர்பாக எல்பி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவமனை நிர்வாக இயக்குனர் சுனில்குமாரை கைது செய்தனர். விபத்து ஏற்பட்டால் பாதுகாப்பாக வெளியேற வசதி இல்லாததால் தீயணைப்பு துறையினர் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு குழந்தைகளை மீட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: