×

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் மீதான குற்றப்பத்திரிக்கை ஏற்பு: நாளை மறுநாள் சிபிஐ நீதிமன்றம் விசாரணை

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையை ஏற்றுக் கொண்ட சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வரும் 24ம்தேதி விசாரணை நடத்துவதாக உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்ற சிபிஐ நீதிமன்றம் 7 நாட்கள் காவல் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ப.சிதம்பரம் நாளை மறுநாள் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அதேப்போல் அவருக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவலும் நாளை மறுநாளோடு முடிவடைகிறது. இந்த நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ கடந்த 18ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது. அதில், ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உட்பட மொத்தம் 14பேர் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கை தொடர்பான வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தனது உத்தரவில், “ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் உட்பட 14 பேருக்கு எதிராக தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்கிறது. இதில் ப.சிதம்பரத்திற்கு எதிரான குற்றப்பத்திரிக்கையின் விசாரணை வரும் 24ம் தேதி அதாவது நாளை மறுநாள் நடைபெறும். அப்போது அவரை நேரில் ஆஜர்படுத்த வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு
சிபிஐ கைது நடவடிக்கைக்கு எதிராக ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த வாரம் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வெளியிட உள்ளது.

Tags : CBI ,Chidambaram ,court hearing , INX Media Abuse, PC Chidambaram, Criminal Investigation, CBI Court
× RELATED யெஸ் வங்கி நிதி மோசடி தொடர்பாக மும்பை...