எம்எல்ஏ பெயருக்கு வந்திருந்தது பார்சல் குண்டு வெடித்து வாலிபர் கை துண்டிப்பு: ஹுப்பள்ளி ரயில் நிலையத்தில் பயங்கரம்

ஹுப்பள்ளி: ஹுப்பள்ளி ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமான பார்சலை பிரித்தபோது குண்டு வெடித்ததில் வாலிபரின் கை துண்டானது. அவர்  ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆந்திராவின் விஜயவாடாவில் இருந்து கர்நாடகாவின் ஹுப்பள்ளிக்கு புறப்பட்ட அமராவதி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை ஹுப்பள்ளி ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது ரயிலில் இருந்து இறக்கிவைக்கப்பட்டிருந்த பார்சல்களில் ஒன்று சந்தேகப்படும்படியாக இருந்தது. இந்த பார்சல் மகாராஷ்டிரா மாநிலம், கொல்லாப்புரா சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ.வான பிரகாஷ்ராவ் அபிட்கருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த பார்சல் மீது கொல்லாப்புரா எம்.எல்.ஏ. பிரகாஷ்ராவ் அபிட்கரின் விலாசம் இருந்தது. மேலும் பார்சல் மீது ‘‘நோ பாஜ, நோ காங்கிரஸ், ஒன்லி சிவசேனா’’ என எழுதப்பட்டிருந்தது.

Advertising
Advertising

இந்த பார்சலை பார்த்த ஆர்.பி.எப். போலீசார், ஒரு வேளை இது பிரியாணி பார்சலாக இருக்குமோ என சந்தேகம் அடைந்தனர். இதனால், ஆர்.பி.எப். போலீசார், ரயில் நிலையத்தில் ஓட்டலை குத்தகைக்கு எடுத்து நடத்தி வரும் அப்துல் ஹுசேன் சாப்(22) என்ற வாலிபரை அழைத்து பார்சலை பிரிக்கும்படி கூறினர். பார்சலை அப்துல் ஹுசேன் சாப் பிரித்துக்கொண்டிருக்கும்போது அது பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் அப்துல் ஹுசேன் சாப்பின் கை துண்டானது. மேலும், அவரது உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. அத்துடன் ரயில் நிலைய அறைகளின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.பார்சல் குண்டு வெடித்ததில் பலத்த காயம் அடைந்த அப்துல் ஹுசேன் சாப்பை மீட்டு சிகிச்சைக்காக கிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் ஹுப்பள்ளி நகரில் மட்டும் இன்றி மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பார்சல் வெடித்தது குறித்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த நிபுணர் குழு  சோதனை மேற்கொண்டனர். அப்போது பார்சலில் வைத்திருந்தது நிலவெடி (பீல்டு பாம்) என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. கர்நாடக மாநிலத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உள்துறை அமைச்சர் பசவராஜ்பொம்மை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: