தண்டனை காலம் முடியும் வரை சிறைதான் சசிகலா முன்கூட்டியே விடுதலை கிடையாது: கர்நாடக ஏ.டி.ஜி.பி மெஹரிக் தகவல்

பெங்களூரு: ‘‘பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு நன்னடத்தை கைதிகள் விடுதலை பொருந்தாது. அவர் தண்டனை காலம் முடியும் வரை சிறையில் இருக்க வேண்டும்’’ என்று சிறைத்துறை ஏ.டி.ஜி.பி மெஹரிக் தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்ட இவர்களுக்கு 2020ம் ஆண்டு இறுதியில் தான் தண்டனை காலம் முடிவடைகிறது. இதற்கிடையே சசிகலா பல்வேறு சர்சைகளில் சிக்கி வருகிறார். 2018ம் ஆண்டு பெங்களூரு சிறையில் சிறப்பு சலுகை வசதி வேண்டுமென்று அப்போதைய டி.ஜி.பி சத்தியநாராயணாவிற்கு சசிகலா ₹2 கோடி லஞ்சம் கொடுத்ததாக பரபரப்பு தகவல் வெளியானது.

இதுகுறித்து சிறை கைதிகள் அளித்த புகாரின்பேரில் அப்போதைய டி.ஐ.ஜி ரூபா, சசிகலாவின் அறையில் சோதனை நடத்தி, அறிக்கை அளித்தார். அதில் சசிகலாவிற்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டிருப்பது உண்மைதான் என்று பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டார். அதில் ஒன்று சசிகலா ஷாப்பிங் சென்றுவிட்டு, சிறைக்கு திரும்பிய வீடியோ காட்சிகள்.  இது கர்நாடக மாநில அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியதால் அப்போதைய அரசு சிறைத்துறை முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய் குமாரை நியமித்தது. இவர் விசாரணை நடத்தி கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் மாநில அரசுக்கு அறிக்கை அளித்தார். அதில் தண்டனை கைதி சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டிருப்பது உண்மைதான். இதற்காக சசிகலா லஞ்சம் வழங்கியிருந்தார். ஆனால் எவ்வளவு என்பதும், யாருக்கு வழங்கினார் என்பதும் அறிக்கையில் குறிப்பிடவில்லை.

இருப்பினும் இந்த அறிக்கையை ஏற்ற மாநில அரசு ஊழல் தடுப்பு படை விசாரணைக்கு உத்தரவிட்டது. இன்று வரை ஊழல் தடுப்பு படை விசாரணை நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், சசிகலாவை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்வதற்கு தேவையான நடவடிக்கையில் அவரது தரப்பு ஈடுபட்டதாக பரபரப்பு தகவல் வெளியானது. இதற்காக மத்திய மாநில அரசுகளின் உதவியை நாடியதாக கூறப்பட்டது. இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று கர்நாடக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி மெஹரிக் இதுகுறித்து கூறுகையில், ‘‘சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் கர்நாடக ராஜ்யோத்சவாவையொட்டி நன்னடத்தை அடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்படுவது வழக்கம். அதன்படி நேற்று மாநிலம் முழுவதும் 141 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

இதில் சசிகலாவின் பெயர் இடம் பெறவில்லை. இதுகுறித்து செய்தியாளர்கள் கூடுதல் டி.ஜி.பி மெஹரிக்கிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், ‘‘10 ஆண்டுகள் நிறைவடைந்த கைதிகளின் நடவடிக்கையை வைத்தே விடுதலை செய்யப்படுவார்கள். ஆனால் சசிகலாவிற்கு இந்த நன்னடத்தை விதிகள் பொருந்தாது. 4 ஆண்டுகள் தண்டனை கைதி என்பதால், அவரை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய முடியாது. 2020வரை அவர் தன்னுடைய சிறை வாசத்தை அனுபவித்தே ஆக வேண்டும். தண்டனை காலம் முடிந்த பின்னர் பிற கைதிகளை போன்று விடுதலை செய்யப்படுவார்’’ என்று மெஹரிக் தெரிவித்தார்.

Related Stories: