சந்தோசத்தின் உச்சத்தில் ஆசிரியர்கள்: தீபாவளி மறுநாள் திங்கள் கிழமையும் அரசு விடுமுறை...தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: வரும் 27-ம் தேதி நாடு முழுக்க தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நகரப் பகுதிகளில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளியைக் கொண்டாட செல்லும்  மக்கள் ஏராளமானோர் உள்ளனர். இந்த வருடம் ஞாயிற்றுக்கிழமை, தீபாவளி பண்டிகை வருவதால், வெள்ளிக்கிழமையே சொந்த ஊருக்கு கிளம்பி செல்வதற்காக மக்கள் விருப்ப படுவார்கள். ஆனால், பள்ளி கால அட்டவணைப்படி முந்தைய  நாளான சனிக்கிழமை வேலை நாட்களாக இருந்தது. இதனையடுத்து, அக்டோபர் 26-ம் தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்தது.

Advertising
Advertising

இதற்கிடையே, தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வருட தீபாவளி வரும் 27.10.2019 அன்று ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. பெரும்பாலும் ஆசிரியர்கள் சொந்த  மாவட்டத்தில் வேலை செய்வதில்லை. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பல கிலோ மீட்டர் தொலைவில் பணிபுரிந்து வருகிறார்கள். ஆசிரியர்கள் அனைவரும் தீபாவளி நாளைக் கொண்டாடிவிட்டு, அன்றே வெளியூரில் இருந்து பணிக்குத்  திரும்புவது மிகவும் சிரமத்தை ஏற்படுத்துவதோடு மன உளைச்சலையும் உண்டாக்கும்.

தீபாவளி நன்னாளை குடும்பத்தோடு மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வகையில் தீபாவளிக்கு மறு நாளான திங்கள் கிழமையினை விடுமுறை நாளாக அறிவிக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். மேலும் 28.10.2019  திங்கள் கிழமை விடுமுறை விடுவதை ஈடு செய்ய, அரசு அறிவிக்கும் ஏதாவது ஒரு விடுமுறை நாளான சனிக்கிழமையன்று பணிபுரிந்து ஈடு செய்து விடுவோம். எனவே பள்ளிக் கல்வித்துறையும் அரசும் பரிசீலித்து தீபாவளி மறுநாள் 28.10.2019  அன்று விடுப்பு வழங்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், தீபாவளி மறுநாள் திங்கள் கிழமை அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழகம் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை என அரசு  அறிவித்துள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நவம்பர் 9-ம் தேதியை பணிநாளாக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

Related Stories: