தீபாவளி வியாபாரம் களை கட்டியது: ஈரோடு கனி மார்க்கெட்டில் ரூ.10 கோடிக்கு ஜவுளி விற்பனை

ஈரோடு: தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் ஈரோடு கனிமார்க்கெட் ஜவுளி வளாகத்தில் நேற்று ஜவுளி விற்பனை களைகட்டியது. ஒரேநாளில் ரூ.10 கோடிக்கு விற்பனையானது.  தமிழகத்தின் மிகப்பெரிய ஜவுளிசந்தையான ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள கனிமார்க்கெட் ஜவுளிசந்தையில் 270 தினசரி கடைகளும், 900 வாரச்சந்தை கடைகளும் இயங்கி வந்தன. இந்த ஜவுளிசந்தையில் வாரச்சந்தை கடைகளுக்காக  அமைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒருங்கிணைந்த வணிக வளாகம் கட்டும் பணி துவங்கப்படவுள்ளதால் வாரச்சந்தை கடைகள் வெவ்வேறு பகுதிக்கு சென்று விட்டது. இதனால் தினசரி கடைகளுக்கு மட்டும் புதியதாக தற்காலிக கடைகளை  மாநகராட்சி சார்பில் அமைத்து கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக ஜவுளிகளை வாங்க நேற்று அதிக அளவில் பொதுமக்கள் வந்திருந்தனர்.இதனால் பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, ஆர்கேவி., ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. கனிமார்க்கெட் ஜவுளிக்கடைகள் மட்டுமின்றி ரோட்டோரங்களில் பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து மணிக்கூண்டு  வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிளாட்பார கடைகளும் போடப்பட்டிருந்தது. இதேபோல ஆர்கேவி., ரோட்டில் உள்ள ஜவுளிகடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

நேற்று விடுமுறை தினம் என்பதால் நகைகள் மற்றும் பல்வேறு பொருட்கள், ஜவுளிகளை வாங்கி செல்வதற்காக ஏராளமான மக்கள் வந்திருந்தனர். ஜவுளிகளை வாங்கி செல்வதற்காக ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கரூர், திருப்பூர், கோவை,  நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்திருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் போக்குவரத்து போலீசார், சட்டம், ஒழுங்கு போலீசார் என  120க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கூட்டம் அதிகரித்த நிலையில் போக்குவரத்தும் மாற்றப்பட்டது. வழக்கமாக பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து பஸ் ஸ்டாண்டிற்கு மணிக்கூண்டு வழியாக பஸ்கள் மற்ற  வாகனங்கள் செல்வது வழக்கம்.

ஆனால் நேற்று பன்னீர்செல்வம் பார்க்கில் பேரிகார்டுகளை வைத்து போக்குவரத்தை தடை செய்து பிரப்ரோடு வழியாக வாகனங்களை அனுப்பி வைத்தனர். வழக்கமான விற்பனையை விட நேற்று 90 சதவீதம்  சில்லரை விற்பனை இருந்தது. இதேபோல 75 சதவீதம் மொத்த ஜவுளிகள் விற்பனையும் செய்யப்பட்டது. நேற்று கூட்டம் அதிகரித்த நிலையில் ஒரேநாளில் ரூ.10 கோடி அளவிற்கு ஜவுளிகள் விற்பனையானது. இதனால் ஜவுளி வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வரும்  நாட்களில் இன்னும் விற்பனை அதிகமாக வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: