சிரியாவில் உள்ள துருக்கியின் கண்காணிப்புத் தளங்களை ஏற்றுக்கொள்ள முடியாது: ஈரான் விமர்சனம்

ஈரான்: சிரியாவில் உள்ள துருக்கியின் கண்காணிப்புத் தளங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஈரான் விமர்சித்துள்ளது. துருக்கி அதிபர் எர்டோகன் சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கியின் 12 கண்காணிப்புத் தளங்கள் இருக்கும் என்றும் துருக்கி தனது தாக்குதலை வேண்டுமென்றால் மீண்டும் தொடரும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் துருக்கி அதிபர் எர்டோகனின் இந்த முடிவை ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, துருக்கி தனது எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், தனது எல்லையிலும் எம்மாதிரியான தளங்களையும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் சிரியாவில் தனது கண்காணிப்புத் தளங்களை வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார்.

துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில் சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து போராளிகளுக்கு எதிராக துருக்கி மேற்கொண்டுள்ள இந்த ராணுவ நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து 5 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு துருக்கி சம்மதம் தெரிவித்தது.

Related Stories: