கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருவாய்த்துறை சோதனை நிறைவு: ரூ.44 கோடி ரொக்க பணம், ரூ.20 கோடி அமெரிக்க டாலர் பறிமுதல்

சென்னை: ஆந்திராவில் உள்ள வரதய்யா பாளையத்தை மையமாக கொண்டு அறக்கட்டளை, நிறுவனங்கள் என்ற பெயரில் பல ஆண்டுகளாக சமயம், தத்துவம் ஆகியவற்றில் பயிற்சி திட்டங்கள் நடத்தி வந்துள்ளன. இந்த பயிற்சிகள் சென்னை  பெங்களூர், ஆந்திரா பகுதியில் நடத்தப்பட்டுள்ளது. இந்த குழு கடந்த 1980ம் ஆண்டு சமயதத்துவத்தை அடிப்படையாக கொண்டு கல்கி பகவான் தலைமையில் உருவாக்கப்பட்டது. மேலும், அது ரியல் எஸ்டேட், கட்டுமானம், விளையாட்டு  உள்ளிட்ட தொழில்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் இந்த தொழில்கள் விரிந்தது. இந்த குழுவை உருவாக்கிய கல்கி பகவான் மற்றும் அவரின் மகன் கிருஷ்ணா கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இந்த குழுவினர் நடத்தும் பல்வேறு பயிற்சிகள் வெளிநாடுகளில் வாழும் மக்களையும் வெகுவாக கவர்ந்து அதில் உறுப்பினர்களாக சேர்க்க வைத்தது. அதன் மூலம் வெளிநாடுகளில் இருந்தும் வருவாய் வந்தது. இந்த வருவாய் ஆந்திரா மற்றும்  தமிழகத்தில் பெருமளவில் நிலத்தில் முதலீடு செய்தது. வெளிநாடுகளிலும் அதேபோல அதிக அளவில் நிலத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, சென்னை உள்பட நாடு முழுவதும் இயங்கி வரும் கல்கி நிறுவனத்தில்,  வருவாய்த்துறையினர் கடந்த சில நாட்களாக அதிரடி சோதனை நடத்தினர்.

வருவாய்த்துறை நடத்திய அதிரடி சோதனையில் சென்னை, ஐதராபாத், பெங்களூரு, வரதய்யபாளையம் ஆகிய இடங்களில் 40 வளாகங்களில் செயல்படுவது கண்டறியப்பட்டது. சோதனையில், இக்குழுவில் உள்ள முக்கிய நபர்கள்தான் இந்த  வருவாயை பெற்று கணக்கில் காட்டாமல் ஆவணங்களை கையாண்டுள்ளனர் என்றும், பண பரிமாற்றம், முதலீடு செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், சொத்துக்களை ஆவணங்களில் உள்ள மதிப்பைக் காட்டிலும் அதிக விலைக்கு விற்று  கணக்கில் காட்டாமல் பெற்றுள்ளனர். கடந்த 2014-15ம் ஆண்டில் மட்டும் கணக்கில் வராத வருவாயாக ரூ.409 கோடி பெற்றுள்ளனர். இந்த கணக்கில் வராத பண வருவாய் மற்றும் இதர விலைமதிப்பில்லா வருவாய்களும் அதிக அளவில் அதன்  நிறுவனர் மற்றும் அவரது மகன் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. ஒரு வளாகத்தில் இருந்து மட்டும் ரூ.43.9 கோடி பணம் இருப்பதும், வெளிநாட்டு கரன்சியும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கல்கி ஆசிரமத்தின் பல்வேறு கிளைகளில் 5 நாட்களாக நடைபெற்ற சோதனை நேற்று இரவோடு முடிந்தது. கடந்த 5 நாட்களாக நடைபெற்ற சோதனை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளார். கல்கி  ஆசிரமத்திற்கு 4,000 ஏக்கர் நிலம் இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. துபாய், ஆபிரிக்கா, பிரிட்டிஷ், வெர்ஜின் தீவுகளில் ரூ.100 கோடி அளவுக்கு முதலீடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரூ.44 கோடி ரொக்க பணம், ரூ.20 கோடி  அமெரிக்க டாலர், 90 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஹவாலா முறையிலும் கல்கி ஆசிரமம் பணபரிமாற்றங்களை செய்துள்ளது. கல்கி என்கிற விஜயகுமாரின் மகன் கிருஷ்ணா, மருமகள் ப்ரீதா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனவும் வருமான வரித்துறை அதிகாரிகள் புகார்  தெரிவித்துள்ளனர். 

Related Stories: