கொடைக்கானலில் பெய்த கனமழையால் அடுக்கம் - பெரியகுளம் இடையே நெடுஞ்சாலை துண்டிப்பு: பொதுமக்கள் தவிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பெய்த கனமழையால் அடுக்கம் - பெரியகுளம் இடையே நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு பொதுமக்களும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்துவருகிறது.

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌லில் நேற்றிரவு (ஞாயிறு இரவு) பெய்த‌ க‌ன‌ம‌ழையால் அடுக்க‌ம் கிராம‌த்திலும், பெரிய‌குள‌ம் செல்லும் வ‌ழியிலும் ராட்ச‌த‌ பாறைகள் உருண்டு விழுந்து நில‌ச்ச‌ரிவு ஏற்பட்டது. இதனால் அடுக்கம் கிராம‌த்தின் முன்னும் பின்னும் சாலை துண்டிக்கப்பட்டதால் கிராம‌ ம‌க்க‌ள், ப‌ள்ளி மாண‌வ‌ மாண‌விக‌ள் கிராமத்தை விட்டு வெளியேற‌ முடியாம‌ல் த‌வித்தனர்.

நெடுஞ்சாலைத்துறையினர் நிலச்ச‌ரிவை அக‌ற்றி பாதையை செம்மைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் அக்.21 காலை 8.30 நிலவரப்படி திண்டுக்கல் 3.3 மி.மீ, நத்தம் 12 மி.மீ, நிலக்கோட்டை 8.4 மி.மீ, பழநி 22 மி.மீ, சத்திரப்பட்டி 7 மி.மீ, வேட்சந்தூர் 58 மி.மீ அளவு மழை பெய்துள்ளது. அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக தென் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: