மதுரை மேலூர் அருகே தீபாவளி போனஸ் வழங்காத நிர்வாகத்தை கண்டித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

மதுரை: மதுரை மேலூர் அருகே கத்தப்பட்டி சுங்கச்சாவடி மையத்தில் தீபாவளி போனஸ் வழங்காத நிர்வாகத்தை கண்டித்து ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுமார் 1 மணி நேரமாக இலவசமாக அனைத்து வாகனங்களும் கடந்து செல்கின்றனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே கத்தப்பட்டி நான்குவழி சாலையில் சுங்கச்சாவடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் பல லட்சம் கணக்கிலான வாகனங்கள் இந்த சாலையை கடந்து செல்கின்றன. இந்நிலையில் இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படாததால் நிர்வாகத்தை கண்டித்து பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தங்களது ஊதியத்தில் 45 சதவீதம் மட்டுமே தீபாவளி போனஸாக வழங்கப்பட்டதாகவும் அதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு மாத சம்பளத்தொகையை தங்களுக்கு போனஸாக வழங்கக்கோரி தற்போது பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertising
Advertising

இதற்கு முன்பு இந்த சுங்கச்சாவடி மையத்தை டெண்டர் எடுத்திருந்த நிறுவனம் தங்களுக்கு 6 வருடங்களாக தீபாவளி போனஸ் தொடர்ந்து கொடுத்து வந்ததாகவும், ஆனால் தற்போது வந்துள்ள சாய் ஏஜென்சி என்ற நிறுவனம் தீபாவளி போனஸ் வழங்கவே பாரபட்சம் காட்டி வருவதாகவும் சுங்கத்துறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தினால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரமாக இலவசமாக இந்த சாலையை பயன்படுத்தும் அனைத்து வாகனங்களும் செல்கின்றன. தற்போது வரை 1 மணி நேரத்தில் 1 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Related Stories: