சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும்: தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மைய இயக்குனர் பேட்டி

சென்னை: அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாலும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள திண்டுக்கல், தேனி, கோவை, மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர்,சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், நீலகிரி, கோவை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குமரி மாவட்டம் குழித்துறையில் 14 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கோவை மாவட்டம் பெரிய நாயக்கன்பாளையத்தில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேட்டுப்பாளையம் 9 செ.மீ., குலசேகரபட்டினம் 8 செ.மீ., வால்பாறை, அரவக்குறிச்சி, தூத்துக்குடி 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் குமரி கடல் பகுதிக்கு வரும் 21,22 ஆகிய தேதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: