அனுமதி 3 அடி; அள்ளியது 10 அடி: கூறு போடப்பட்ட குசவன்குளம்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே, குசவன்குளத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மண் அள்ளியதால், மெகா பள்ளங்கள் உருவாகி, பாசனத்துக்கு தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வத்திராயிருப்பிலிருந்து  சேதுநாராயணபுரம் செல்லும் வழியில் குசவன்குளம் உள்ளது. இக்குளம் மூலம் பல நூறு ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வீராகசமுத்திரம் கண்மாயிலிருந்தும், மழை காலங்களில்  காட்டுப்பகுதி நீரோடைகள் மூலமாகவும் இக்குளத்திற்கு நீர்வரத்து வரும். குளத்தில் தண்ணீர் தேங்கினால், அப்பகுதி விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து விவசாயத்துக்கு பயன்படும்.

Advertising
Advertising

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அனுமதி பெற்றும், பெறாமலும் 10 அடி ஆழத்திற்கு மேல் மண் தோண்டியுள்ளனர். 3 அடி ஆழம் வரை மட்டுமே மண் அள்ள அனுமதி உண்டு. இதனால், குளத்தில் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. குளத்தில் தண்ணீர் தேங்கினாலும் மதகுப் பகுதி வழியாக பாசனத்துக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், குளக்கரையின் மேற்குப்பகுதியையும் தோண்டி மண் அள்ளியுள்ளனர். இதனால், தண்ணீர் தேங்கினால், கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குளக்கரையை சீரமைத்து, தண்ணீர் தேங்குவதற்கு ஏற்ப குளப்பகுதியை சமமாக சீரமைக்க வேண்டும். மேலும், குளக்கரை வழியாக சேதுநாராயணபுரத்திற்கு சாலை செல்கிறது. கரையில் உடைப்பு ஏற்படும் பட்சத்தில் போக்குவரத்தும் பாதிக்கப்படும். எனவே, குளக்கரையை பலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: