×

அருப்புக்கோட்டையில் கழிவுநீர் குளமான கோயில் தெப்பக்குளம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் நூறாண்டு கோயில் தெப்பக்குளம், பராமரிப்பின்றி கழிவுநீர் குளமாக மாறி வருகிறது. குளத்தின் ஒரு பகுதியில் தடுப்புச்சுவர் இல்லாததால், இரவில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. குடிமகன்கள் திறந்தவெளி ‘பார்’ ஆக குளப்பகுதியை மாற்றி வருகின்றனர். அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் நூறாண்டு பழமையான மீனாட்சி சொக்கநாதர் கோயில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்குச் சொந்தமாக தெப்பக்குளம் உள்ளது. அந்த காலத்தில் சூரிய புஷ்கரணி என இக்குளத்தை அழைத்துள்ளனர். இக்குளத்தில் குளித்தால் தீராத நோய் தீரும் என்பது ஐதிகம். குளத்தில் நீர் நிறையும்போது, அப்பகுதி வீடுகளில் உள்ள போர்வெல்களில் நீர்மட்டம் உயரும். இதனால், தண்ணீர் பிரச்னை ஏற்படாது. சொக்கலிங்கபுரம், வெள்ளக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் குளிக்க, துவைக்க இக்குளத்தை பயன்படுத்தி வந்தனர். நீர்வரத்து பாதை ஆக்கிரமிப்பு: இந்நிலையில், முறையான பராமரிப்பின்றி தெப்பக்குளம் கழிவுநீர் குளமாக மாறியுள்ளது. பாசிபடர்ந்துள்ளதால், சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. தற்போது மழை பெய்தாலும், குளத்திற்கு நீர்வரத்து இல்லை. நீர்வரத்து பாதை எல்லாம் ஆக்கிரமிப்பில் உள்ளது.

தடுப்புச்சுவர் தேவை: தெப்பக்குளத்தின் ஒரு பகுதியில் தடுப்புச்சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள் தடுப்புச்சுவர் இல்லாத பகுதி வழியாக நடந்து செல்கின்றனர். இப்பகுதியில் மின்விளக்கு வசதியும் இல்லை. இதனால், இரவு நேரங்களில் டூவீலரில் வருவோர், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும்போது, நிலை தடுமாறி குளத்திற்குள் விழும் அபாயம் உள்ளது. எனவே, மின்விளக்கு, தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.
குடிமகன்கள் கும்மாளம்: தெப்பக்குளத்தை குடிமகன்கள் திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர். மது அருந்திவிட்டு கூச்சல் கும்மாளம் போடுகின்றனர். அந்த சமயங்களில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியவில்லை. மதுபாட்டில்களை உடைத்து போடுகின்றனர். உடைந்த பாட்டில்கள் பாதசாரிகளின் கால்களை பதம் பார்க்கின்றன. இது குறித்து கோயில் நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. எனவே, இந்து அறநிலையத்துறை நிர்வாகம், தெப்பத்தை சுற்றி முள்வேலி அமைத்து தூர்வாரியும், நீர்வரத்து பாதைகளை சீராக்கி, குளத்தில் மழைநீர் தேங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குடிமகன்களின் தொல்லையை கட்டுப்படுத்த, இரவு நேரங்களில் போலீசார் ரோந்து செல்ல வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Temple Theppakulam ,sewage pond ,Aruppukkottai. The Temple Pond , The Temple Pond
× RELATED நாகர்கோவில் வடிவீஸ்வரம் கோயில்...