9 மாதங்களாக கேட்பாரற்று கிடக்கும் நகராட்சி குப்பை அள்ளும் பேட்டரி வாகனங்கள்

கும்பகோணம்: கும்பகோணம் பகுதியில் 9 மாதங்களாக நகராட்சி குப்பை அள்ளும் பேட்டரி வாகனங்கள் கேட்பராற்று கிடக்கிறது. இதனால் ரூ.1 கோடி வீணாகும் அபாயம் உள்ளது. கும்பகோணம் நகராட்சிக்கு உட்பட்ட 45 வார்டுகளில் 2 லட்சம் வீடுகள் உள்ளன. இப்பகுதிகளில் சேகரிக்கும் குப்பைகளை, கரிக்குளம் பகுதிக்கு சென்று மறு சுழற்சி செய்யப்பட்டு அதை பல்வேறு வகையாக பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் தற்போது வார்டுகளில் குப்பைகளை தரம் பிரிக்கும் இயந்திரமும் வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் தெருக்களில் சேகரிக்கப்படும் குப்பை அள்ளும் மூன்று சக்கர சைக்கிள்கள் பழுதாகியும், டயர், டியூப்கள் இல்லாமல் இழுத்து செல்ல வேண்டியுள்ளது. மேலும் அந்த வண்டியில் குப்பைகளை அள்ளினாலும் தெருவில் சிந்துவதால் நகராட்சி நிர்வாகம் கடந்த 9 மாதங்களுக்கு முன் ரூ.1 கோடி மதிப்பில் 45 வார்டுகளுக்கும் 90 குப்பை அள்ளுவதற்காக பேட்டரி பொருத்திய வாகனங்களை வாங்கியது. பின்னர் இந்த வாகனங்களை திருவிடைமருதூர் சாலை, புதிய மீன் மார்க்கெட் அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கீழ் வைத்தனர். ஆனால் அங்கு போதுமான பாதுகாப்பு இல்லாததால் வாகனத்தில் உள்ள பேட்டரிகள் திருட்டு போக வாய்ப்புள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக பேட்டரி பொருத்திய வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertising
Advertising

இதுகுறித்து முன்னாள் நகர்மன்ற தலைவர் தமிழழகன் கூறுகையில், 9 மாதங்களுக்கு முன் ரூ.1 கோடி மதிப்பில் 45 வார்டுகளுக்கும் 90 பேட்டரி பொருத்திய வாகனங்கள் வாங்கப்பட்டது. ஆனால் அதை பாதுகாப்பான இடத்தில் வைக்கவில்லை. இதனால் பேட்டரி பொருத்திய வாகனங்கள் வீணாகும் நிலை உள்ளது. 9 மாதங்களாக ஒரே இடத்தில் வாகனங்கள் நிறுத்தி வைத்திருப்பதால் அதில் உள்ள பேட்டரிகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால், மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் நடைபெறும் நிகழ்ச்சியின்போது பயன்பாட்டுக்கு வரும் என்கின்றனர். கும்பகோணம் நகராட்சி மக்களின் வரிப்பணத்தில் வாங்கிய பேட்டர் பொருத்திய வாகனங்களை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Related Stories: