தேவாரம் பகுதியில் மழை: சிறுதானிய விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு

தேவாரம்:  தேவாரம் பகுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் சிறுதானியங்கள் விளைச்சல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம் உள்ளிட்ட  ஊர்களில் உள்ள மலையடிவாரங்களில்  அதிகமான ஏக்கர்  பரப்பில்  சிறுதானிய  விவசாயமான சோளம், கம்பு, உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. மழையை எதிர்பார்த்து சிறுதானியங்களை விதைத்த விவசாயிகளின்  நிலங்களில்  ஓரளவு ஈரப்பதம் கிடைத்துள்ளது. இதனால் சோளக்கதிர்கள், கம்பங்கதிர்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழையால் விதைத்த நிலங்களில் கம்பு, சோளம் வளருவது மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது. இதேபோல் சோளக்கதிர்களின் சோகை, கம்பங்கதிர்களின் சோகையை  பொறுத்தவரை கால்நடைகளுக்கு நல்ல தீவனமாக உள்ளது. இதனை கேரளாவில் உள்ள கால்நடை வளர்ப்பவர்கள் போட்டி போட்டு வாங்கி செல்லும் நிலை உள்ளது. விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைப்பதால் இதனை விற்பனை செய்கின்றனர். தற்போதைய வடகிழக்கு பருவ மழை சிறுதானியங்களை  விதைத்த விவசாயிகளுக்கு உற்சாகத்தை தந்து வருகிறது.

மறுபுறம்  சிறுதானியங்கள் விவசாய பரப்பில் சோளம் முக்கிய பயிராக உள்ளதால் மலையடிவாரத்தின் கீழ் இதனை வளர்ப்பதில் விவசாயிகள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. விவசாயிகள் கூறுகையில், உத்தமபாளையம் வட்டாரத்தில் சிறு தானியங்கள் உற்பத்தி அதிகரித்திட விவசாயிகளை வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஊக்குவிக்கவேண்டும். சிறுதானியங்கள் வளர்வதற்கு மழை மிகவும் அவசியம். அதேநேரத்தில் தற்போதை வடகிழக்கு பருவமழை தொடர்ந்து கிடைக்கும்போது இதன் பரப்பு மேலும் அதிகரிக்கும்’’ என்றனர்.

Related Stories: