மருதவனம் அரசு பள்ளியில் மாணவர்கள் உருவாக்கிய தோட்டத்தில் விளைந்த காய்கறிகளால் சமைத்து சத்துணவு பரிமாறல்

முத்துப்பேட்டை: மருதவனம் அரசு பள்ளியில் மாணவர்கள் உருவாக்கிய தோட்டத்தில் விளைந்த காய்கறிகள் சமைத்து சத்துணவு பரிமாறப்பட்டது. இதனை ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் பாராட்டினர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதி அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கும் சத்துணவுகளில் காய்கறிகளால் ஆன ரசயானம் இல்லாத இயற்கையான சத்தான உணவுகளை அதிகளவில் வழங்கும் விதமாக காய்கறி தோட்டம் அமைக்க கல்விதுறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு பல்வேறு பள்ளிகளில் சமீபத்தில் பல்வேறு காய்கறி விதைகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் முத்துப்பேட்டை அடுத்த மருதவனம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்விதுறையால் வழங்கப்பட்ட விதைகளை தலைமையாசிரியை விஜயராணி, ஆசிரியைகள் அமுதாசெல்வி, சுஜாதா ஆகியோர் மாணவர்களிடம் வழங்கி பள்ளி வளாகத்தில் மினி தோட்டம் அமைக்க வழிகாட்டினர்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய மாணவர்கள் பள்ளி வளாகத்தில் பல்வேறு வகை காய்கறி விதைகளை விதைத்து பராமரித்து வந்தனர். இந்தநிலையில் அதிகளவில் கீரை, வெண்டைக்காய், பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட ஏராளமான காய்கறிகள் விளைந்தது. இதனையடுத்து இங்கு விளைந்த காய்கறிகளை மாணவர்கள் பறித்து அங்குள்ள சத்துணவு பணியாளர்களிடம் சமைக்கப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் பரிமாறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளியில் ஆர்வத்துடன் ரசயானம் இல்லாத இயற்க்கையான காய்கறிகளை விளைவித்து வரும் மாணவர்களையும், ஊக்கப்படுத்தி வரும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களை முத்துப்பேட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்தண்ணா மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டியதுடன் மாணவர்கள் அனைவரும் தங்களது வீட்டில் இது போன்று தோட்டம் அமைக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்பு தற்பொழுது நடைபெற்று வருகிறது. மாணவர்கள் சோர்வடையாமல் இருப்பதற்கு பள்ளியில் தினந்தோறும் வெவ்வேறு வகை சுண்டல் செய்து மாணவர்களுக்கு வழங்கி நன்றாக படிப்பதற்கு வழிவகை செய்த தலைமையாசிரியை விஜயராணியை பெற்றோர்கள் பொதுமக்கள் பாராட்டினர்.

Related Stories:

>