குமரியில் கொட்டித்தீர்த்த கனமழையால் தாமிரபரணி, பழையாற்றில் வெள்ளப்பெருக்கு

நாகர்கோவில்: குமரி மாவட்டம் முழுவதும் பெய்த பலத்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. குமரி மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. மலை பகுதிகளில் கனமழை பெய்வதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை முதல் மாவட்டம் முழுவதும் விடிய, விடிய மழை பெய்தது. நேற்று அதிகாலை வரை பெய்த மழை, பின்னர் பகலிலும் நீடித்தது. காலையில் ஒரு சில இடங்களில் ஓய்ந்திருந்த மழை பின்னர் மதியத்துக்கு பின் மீண்டும் தொடங்கியது. அவ்வப்போது இடி, மின்னலும் இருந்தது.

நாகர்கோவில், தக்கலை, கன்னியாகுமரி, பூதப்பாண்டி, குளச்சல், அருமனை, குலசேகரம், திருவட்டார் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. பழையாறு, கோதையாறு, தாமிபரணி, பரளியாறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. தாமிரபரணி ஆற்றில் தடுப்பணைகளில் ஷட்டர்கள் முறையாக சீரமைக்கப்படாததால், தண்ணீர் வீணாக வெளியேறியது. இந்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. நாகர்கோவிலில் பறக்கிங்கால்வாய் ஏற்கனவே கழிவுகளால் நிரம்பி தண்ணீர் செல்லாமல் இருந்தது. இந்த மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்ததால், பறக்கிங்கால் பகுதியையொட்டி உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் பாறைக்காமட தெரு பகுதியில் சுப்பையா என்பவரின் வீடு இடிந்தது. இதே போல் கோட்டார் பரதர் தெருவில், சேவியர் என்பவரின் வீடு இடிந்தது. இந்த சம்பவங்களில் வீடுகளில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். ஏற்னவே நேற்று முன் தினம் கோட்டார் கம்போளம் பகுதியில் ஆட்டோ டிரைவர் ஒருவரின் வீடு இடிந்தது.  ஏற்கனவே கடந்த மாதம் பெய்த மழையால் குளங்கள் நிரம்பி இருந்தன. இப்போது மீண்டும் மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் குளங்கள் உடையும் அபாய நிலை உள்ளது. இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக மாம்பழத்துறையாறு பகுதியில் 78 மி.மீ. மழை பெய்து இருந்தது. மாவட்டத்தின் முக்கிய அணையான பேச்சிப்பாறை அணை நீர் மட்டம் 30.85 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 565 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. மாலையில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. பெருஞ்சாணி அணை நீர் மட்டம் நேற்று காலையில் 69.55 அடியாக இருந்தது. அணைக்கு 561 கன அடி தண்ணீர் வந்தது. பின்னர் தொடர்ந்து மழை பெய்ததால், அணையின் நீர் மட்டம் 70 அடியை தொட்டது. அணையின் மொத்த கொள்ளளவு 77 அடி ஆகும். நீர் மட்டம் உயர்ந்து வருவதால், அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படலாம் என்ற நிலை உள்ளது. எனவே கரையோர பகுதி மக்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தொடங்கி உள்ளது.

சிற்றார் 1, 13.94 அடியாகவும், சிற்றார் 2, 14 அடியாகவும் உள்ளன. பொய்கை 14.30 அடியாக உள்ளது. மாம்பழத்துறையாறு அணை உச்ச நீர் மட்டம் 54.12 அடியாகும். தொடர்ந்து நேற்று 7  வது நாளாக அணை உச்ச நீர் மட்டத்தை எட்டி உள்ளது. இதனால் அணைக்கு வரும் 135 கன அடி தண்ணீர், அப்படியே திறந்து விடப்பட்டு உள்ளது. முக்கடல் அணை நீர் மட்டம் 17.20 அடியாக உயர்ந்து உள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று முன் தினம் ஒரே நாளில் 732.80 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 45.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. நாகர்கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக மாறி உள்ளது. குமரி கடல் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. காற்றின் வேகம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அறுவடைக்கு நெற்பயிர்கள் தயராக இருந்த நிலையில், மழை நீடித்து வருவதால் ஈரப்பதம் அதிகரித்து, நெற்கதிர்கள் சரிந்துள்ளன. இதனால் விவசாயிகள் கலக்கம் அடைந்து உள்ளனர்.

Related Stories:

>