குழாய் உடைந்து விடியவிடிய வீணான கூட்டுக்குடிநீர்

திருப்புவனம்: திருப்புவனத்தில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. திருப்புவனம் வைகை ஆற்றில் இருந்து திறந்தவெளி கிணறு அமைக்கப்பட்டு 47 கி.மீ தொலைவில் உள்ள அருப்புக்கோட்டை நகருக்கு தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த 1972ல் திமுக ஆட்சியின் போது இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. தினசரி 35 லட்சம் முதல் 40 லட்சம் லிட்டர் தண்ணீர் வரை கொண்டு செல்லப்படுகிறது. 46 வருடங்களாக இத்திட்டத்தில் எந்த வித பராமரிப்பும் இல்லை. இதனால் ஆங்காங்கே குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. நேற்று முன்தினம் கலியாந்தூர் விலக்கு அருகே குழாய் உடைந்து தண்ணீர் வீணாகியது. மின்சார டிரான்ஸ்பார்மர் அருகே குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியது. இதனால் டிரான்ஸ்பார்மரும் சேதமடைந்தது. டிரான்ஸ்பார்மரை தாங்கி நின்ற சிமெண்ட் மின்கம்பம் சரிய தொடங்கியதை அடுத்து மின் வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து மின்சாரத்தை துண்டித்தனர்.

இதனால் அல்லிநகரம், பழையனுர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு 9 மணிக்கு குழாய் உடைந்த நிலையில் காலை 7 மணிக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. அதுவரை கிட்டத்தட்ட 40 லட்சம் லிட்டர் தண்ணீர் அருகில் உள்ள வயல்வெளிகளில் நிரம்பியது. பலமுறை அருப்புக்கோட்டை கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகளிடம் புகார் கூறியும் தண்ணீர் ஏற்றப்படுவதை நிறுத்தவில்லை. இதனால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டதுடன் குடிநீர் வீணாகியதுதான் மிச்சம். எனவே வரும் காலங்களில் குடிநீர் வீணாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories:

>