கேத்தி பாலாடா பகுதியில் நீரோடை தூர்வாரப்படாததால் பாதிப்பு

ஊட்டி: கேத்தி பாலாடா, கொல்லிமலை, காட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கேரட், உருளைகிழங்கு, பூண்டு உள்ளிட்ட மலை காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. கேத்தி பாலாடா பகுதியில் ஓடும் நீரோடை, விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. இது தவிர மழை நீரை பயன்படுத்தியும் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

கேத்தி பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள சிறு சிறு நீரோடைகளில் உற்பத்தியாகும் தண்ணீர் ஒன்றாக சேர்ந்து கேத்தி பாலாடா பகுதியில் விவசாய நிலங்களுக்கு நடுவே செல்லும் பெரிய நீரோடை வழியாக காட்டேரி அணைக்கு சென்று சேர்கிறது. இந்த நீரோடை சுமார் 10 கி.மீ., நீளம் உள்ளது. இந்த நீரோடை தூர்வாரி பல ஆண்டுகள் ஆன நிலையில் பல இடங்களில் செடிகள் வளர்ந்தும், பிளாஸ்டிக் குப்பைகள் சூழ்ந்தும், மண் குவிந்தும் காணப்படுகிறது. பல இடங்களில் நீரோடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் விளை நிலங்களில் இருந்து அடித்து வரப்படும் மண் நீரோடையில் சேர்ந்து விடுகின்றன. இதனால் பெரு மழை காலங்களில் நீரோடையில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் தாழ்வாக உள்ள விவசாய நிலங்களுக்குள் மழைநீர் புகுந்து காய்கறி பயிர்கள் அழுகி விடுகிறது. மேலும் நீரோடைக்கு மிகவும் அருகில், அதனை விட தாழ்வாகவும் விவசாயம் செய்வதாலும் மழைநீர் புகுகின்றன.

 

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக கேத்தி பாலாடா நீரோடையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி விளை நிலங்களுக்குள் புகுந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே கேத்தி பாலாடா பகுதியில் முக்கிய நீராதாரமாக உள்ள நீரோடையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், விளை நிலங்களில் இருந்து மண் அடித்து வரப்படுவதை தடுக்கும் நோக்கில் நீரோடையை ஒட்டி தடுப்புசுவர் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories:

>