செங்கம் அருகே சாலை வசதி இல்லாததால் வாய்க்கால், வரப்பு வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்

செங்கம்: செங்கம் அருகே பள்ளிக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் மாணவர்கள் வாய்க்கால், வரப்பில் நடந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்ரிபாளையம் கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதி விஷ்ணுநகர். இப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இதில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் என 3 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை சுமார் 100 பேர் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக இப்பள்ளிக்கு முறையான சாலை வசதி இல்லாததால் விஷ்ணுநகர் சுற்றியுள்ள பள்ளி மாணவர்கள், அப்பகுதியில் உள்ள வாய்க்கால் வரப்பு பாதையை நாள்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், மழை காலத்தில் வரப்பு சேறும் சகதியுமாக மாறிவிடுவதால் மாணவர்கள் பள்ளிக்கு சென்றுவர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக கிராம பொதுமக்கள் மற்றும் பெற்றோர் மாவட்ட நிர்வாகத்திற்கும், பள்ளி கல்வி துறைக்கும் பல முறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘விஷ்ணுநகர் சுற்றியுள்ள ஏராளமான ஏழை எளிய மாணவர்கள் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பள்ளிக்கு சென்றுவர சாலை வசதி இல்லை. வசதியுள்ளவர்கள் நகர் புறங்களில் உள்ள தனியார் பள்ளிக்கு வேனில் சென்று வருகின்றனர். ஆனால், வறுமையில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள் படிக்க அரசு எத்தனையோ வசதிகள் செய்து கொடுத்தாலும் அது பொதுமக்களுக்கு சரிவர சென்று சேர்வதில்லை. இப்பகுதி மாணவர்கள் பள்ளிக்கு சென்றுவர சாலை வசதியின்றி விவசாய நிலங்கள் வழியே சென்று படித்து வருகின்றனர். இந்த அவல நிலைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’’ என்றனர்.எனவே, பள்ளி மாணவர்களின் நலன் கருதி மாவட்ட நிர்வகம் மற்றும் பள்ளி கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>