நாகையில் ஆளும்கட்சியின் ஆதரவோடு அடிப்படை வசதியில்லாத பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரி

நாகை: நாகை மாவட்டத்தில் ஆளும்கட்சியினரால் அடிப்படை வசதியில்லாத பகுதியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைய இருப்பதை மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு தினந்தோறும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் புறநோயாளிகள் சிகிச்சை பெற மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து செல்கின்றனர். அதேபோல் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக மிகவும் சிக்கல் நிறைந்த சிகிச்சை அளிக்கவும், இலங்கை மீனவர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போது காயமடைந்த மீனவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகள் அழைத்து செல்லப்பட்டனர். இதனால் அங்கு செல்வதற்கு குறைந்தது 3 மணி நேரம் ஆனது. அதேபோல் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் சிகிச்சை பெற வந்தனர்.

இந்த சூழ்நிலையில் நாகை மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று எல்லாதரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் திருச்சியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டது. இதன்பின்னர் திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உருவானது. ஆனால் நாகை மாவட்டத்தில் மட்டும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமையவில்லை. இதனால் நாகை பகுதியை சேர்ந்தவர்கள் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் சிகிச்சை பெற சென்றுவரும் அவல நிலை நீடித்து வந்தது. ஆனால் தொடர்ந்து நாகை மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் நாகை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைய மருத்துவக்கல்லூரி இயக்குநரகம் கடந்த 14ம் தேதி அனுமதியளித்துள்ளது. இதற்கான இடத்தையும் தேர்வு செய்து அனுப்பும்படி மாவட்ட நிர்வாகத்திற்கும், சுகாதாரத்துறை அரசு செயலாளர் அலுவலகத்திற்கும் தகவல் அனுப்பிள்ளது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைய நாகை தாலுகாவிற்கு உட்பட்ட ஒரத்தூர் மந்தவெளி என்ற கிராமத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் இடத்தை தேர்வு செய்து அனுப்பியுள்ளது.

இந்த இடம் நாகை மாவட்டத்தின் ஒதுக்குபுறமான பகுதியாகும். ஆளும்கட்சியினர் தலையீட்டால் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாக தற்பொழுது பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நாகை நகர பகுதியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைய நிறைய இடங்கள் இருக்கும் போது எதற்காக மாவட்டத்தின் ஒரு மூளையில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைய பெற வேண்டும். காடுகள் போன்று மரம், செடிகள் நிறைந்த இந்த பகுதியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைய இருப்பதை கைவிட்டு நகர பகுதியில் தயார் நிலையில் உள்ள இடங்களில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கலாம். மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி அமைந்தால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நோயாளிகள் சிகிச்சை பெற வரும்படி இருக்க வேண்டும். இதைவிட்டு ஒரத்தூர் வேளாங்கண்ணி செல்லும் சாலையில் அதுவும் பஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத கிராமத்தில் அமைய இருப்பதற்கு காரணம் அப்பகுதியை சேர்ந்த ஆளும் கட்சியினர் செல்வாக்கு தான். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்தால் அப்பகுதியில் உள்ள தங்களது நிலங்கள், வீடுகள் விலை உயர்வு ஏற்படும் என்பதற்காக இதுபோன்ற செயல்களில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம் போன்ற மாவட்டத்தின் கடை கோடி பகுதியை சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற எப்படி இவ்வளவு தூரம் வர முடியும். இதற்கு எல்லா வசதிகளும் நிறைந்த தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்று விடுவார்கள். எனவே அரசியல் ஆதாயம் தேடாமல் பொதுமக்கள் நலன் கருதி நகரின் மைய பகுதியில் அனைத்து வசதிகளும் நிறைந்த இடத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

Related Stories: