காட்பாடி டெல் நிறுவனம் ஏவுகணைகளில் வெடிமருந்து நிரப்பும் மையமாகிறது: தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

வேலூர்: மத்திய பாதுகாப்புத்துறையின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், நஷ்டத்தால் இழுத்து மூடப்பட்ட காட்பாடி டெல் நிறுவனத்தை குத்தகைக்கு எடுத்து ஏவுகணைகளில் வெடிமருந்து நிரப்பும் தொழிற்சாலை நிறுவதற்காக தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. பின்தங்கிய மாவட்டமான பழைய வடாற்காடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தமிழக- ஆந்திர எல்லையில் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டையில் பனமடங்கி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தமிழ்நாடு தொழில் வெடிமருந்து நிறுவனம் 700 ஏக்கர் பரப்பளவில் கடந்த 1983ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ம் தேதி அப்போதைய முதல்வர் எம்ஜிஆரால் தொடங்கி வைக்கப்பட்டது.

Advertising
Advertising

இந்நிறுவனம், டெட்டனேட்டர்கள், டெட்டனேட்டர் ஒயர்கள், எமல்ஷன் வெடிமருந்து, ஸ்லரி வெடிமருந்துகள், ராணுவம் தொடர்பான வெடிமருந்துகள் என உற்பத்தி செய்தது. ஏறத்தாழ 700க்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பை பெற்ற நிலையில், கடந்த 15 ஆண்டுகளில் இந்நிறுவனம் படிப்படியாக நஷ்டத்தை நோக்கி சென்றது. இதையடுத்து விஆர்எஸ் முறையில் தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி டெல் நிறுவனம் மூடப்பட்டது. தொடர்ந்து டெல் நிறுவனத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அருவங்காடு ராணுவ தொழிற்சாலை அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். டெல் நிறுவனத்தை தங்கள் வசம் எடுப்பதற்கான பேச்சுவார்த்தையை தமிழக அரசுடன் தொடங்கினர். ஆனால் அத்திட்டம் அப்படியே முடங்கியது. தொடர்ந்து ஆவின் நிறுவனம் வசம் டெல் நிறுவனத்தை ஒப்படைக்கும் திட்டமும் பரிசீலிக்கப்பட்டு நின்று போனது.

இந்நிலையில், மத்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் டெல் நிறுவனத்தை குத்தகைக்கு எடுத்து நடத்த தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 26ம் தேதி தமிழக அரசுடன் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி, டெல் நிறுவனத்தை ரூ.50 கோடிக்கு குத்தகைக்கு எடுத்து நடத்த பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்நிறுவனம் ராணுவத்துக்கு தேவையான ஏவுகணைகளை பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தயாரித்து, காட்பாடியில் வெடிமருந்தை நிரப்பி புனேவுக்கு அனுப்பி வைக்கும். அதன்படி இங்கு 340 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து டெல் மேலாண்மை இயக்குனர் மற்றும் ஆவின் மேலாண்மை இயக்குனர் காமராஜை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘கடந்த 15 நாட்களுக்கு முன்பு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. விரைவில் அவர்கள் டெல் நிறுவனத்தை குத்தகைக்கு எடுத்து தங்கள் உற்பத்தியை தொடங்குவார்கள்’ என்றார்.

பாரத்எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பெங்களூரு, சென்னை, காசியாபாத், புனே, மசூலிப்பட்டினம், பஞ்ச்குலா, கோட்துலா, ஐதராபாத், நவிமும்பை ஆகிய இடங்களில் தொழிற்சாலைகளை கொண்டுள்ளது. போர் விமானங்கள், ராடார்கள், ஏவுகணைகள், எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்கிறது.

Related Stories: