கி.மு.5, 6ம் நூற்றாண்டிலேயே கீழடி நகர நாகரீகத்துடன் இருந்துள்ளது: மதுரை எம்.பி., வெங்கடேசன் தகவல்

திருச்சி: களம் இலக்கிய அமைப்பின் சார்பில் ‘கீழடி நம் தாய்மடி’ நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. ரமேஷ்பாபு தலைமை வகித்தார். கவிஞர் நந்தலாலா முன்னிலை வகித்தார். எழுத்தாளரும், மதுரை தொகுதி எம்.பி.யுமான வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது: வரலாற்று உணர்வும், எழுத்தறிவு கொண்ட சமூகமாகவும் தமிழ் சமூகம் விளங்கியுள்ளது. 2,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களிடம் கால்கோல் நடும் முறை இருந்துள்ளதை தொல்காப்பியம் விளக்குகிறது. அதைப் பின்பற்றியே இன்றளவும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கால்கோல் நடப்பட்டு வருகிறது. தமிழ் மொழியிலுள்ள மூத்த வார்த்தைகளில் ஒன்று கால்கோல். மதுரை அருகே தேனூரில் சாய்ந்து விழுந்த மரத்தின் அடிப்பகுதியில் தங்கக் கட்டிகள், மணிகளைக் கொண்ட புதையல் இருந்தது. அதில் தமிழி எனப்படும் பிராமி எழுத்துக்களில் கோதை என்ற பெயர் 7 தங்கக் கட்டிகளில் எழுதப்பட்டிருந்தது. 2,000 ஆண்டுகளுக்கு முன்பே நம்மிடம் இருந்தது சங்கத் தமிழ் மட்டுமல்ல. தங்கத் தமிழும்கூட.

அதேபோல வைகை ஆறு கடலில் கலக்கும் இடமான அழகன்புரத்தில் கிடைத்த பானை ஓட்டில் கிரேக்க கப்பலின் படம் இருந்தது. இதன்மூலம் சங்க காலத்திலேயே கிரேக்கத்துக்கும், அழகன்புரத்துக்குமான தொடர்பு வெளிப்பட்டது. வைகை தனது துவக்கத்திலிருந்து முடியும் இடம் வரை எண்ணற்ற அடையாளங்கள், தடயங்களைக் கொண்டுள்ளது. இந்த வழித்தடத்திலுள்ள சுமார் 500 கிராமங்களில் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அதில் 293 கிராமங்கள் வரலாற்று தடயங்கள், எச்சங்களைக் கொண்டவை எனக் கண்டறியப்பட்டது. இதில் 100 கிராமங்கள் சங்க கால தடயங்கள் உள்ள கிராமங்களாக அறியப்பட்டுள்ளது.

உலகில் அதிக கல்வெட்டுக்கள் கிடைத்த நாடு இந்தியா. இங்கு அதிக கல்வெட்டுக்களை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கீழடியில் கடந்த 5 ஆண்டுகளாக அகழாய்வு நடைபெறுகிறது. சங்க காலத்தில் நகர நாகரீகம் இருந்தது என இலக்கியங்கள் வாயிலாக கூறி வந்தோம். அதை நிரூபிக்கும் வகையில் கி.மு 5, 6ம் நூற்றாண்டிலேயே கீழடி நகர நாகரீகத்துடன் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்டிடம், செங்கல், வடிகால், அணிகலன்கள், சதுரங்க (செஸ்) காய்கள் போன்றவை கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. கீழடியில் நகர நாகரீகம் மிகச் செழிப்பாக இருந்துள்ளது. கீழடியின் எழுத்து மரபு, எழுத்தறிவு மிக முக்கியம். கீழடி குறித்த தகவல்களை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் சிலருக்கு இல்லை. குறியீடுகள் எப்படி எழுத்துக்களாக மாறியது என்பதை வெளிப்படுத்தியதுதான் கீழடியின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு. தமிழரின் பண்பாடு, நாகரீகம் செழிப்பாக வளர்ந்திருந்ததற்கு கீழடி மக்கள் எழுத்தறிவுடன் இருந்தனர் என்பதே சான்று.

சங்க காலத்தில் 40 பெண் புலவர்களைக் கொண்ட ஒரே மொழியாக தமிழ் விளங்குகிறது.

ஆண், பெண் இருவருக்கும் சமமான கல்வி பகிர்வு இருந்துள்ளது. சிந்து சமவெளி அகழாய்வில் கிடைத்த சில குறியீடுகளும், கீழடியில் கிடைத்த சில குறியீடுகளும் ஒன்றாக இருந்துள்ளன. பல வணிகர்கள் கூடும் இடத்தில் பல மொழியும், பண்பாடும் வளரும். கொடுக்கல், வாங்கலில்தான் நாகரீகம் வளரும். கீழடியில் இதுவரை சாதி, சமயம், மதம் சார்ந்த, வழிபாடு சார்ந்த எந்த பொருட்களும் கிடைக்கவில்லை. இது ஆத்திகம், நாத்திகம் தொடர்புடைய பிரச்னை இல்ல. சங்க காலத்தில் முன்னோர்களை வழிபட்டனர். அதை இன்றளவும் குலசாமியாக வணங்குகிறோம். அதற்கடுத்ததாக இயற்கையை வழிபட்டுள்ளனர். நீர் மேலாண்மையின் உச்சமாக தமிழ்நாடு இருந்துள்ளது. இங்கு புதிய கண்டுபிடிப்புகள் வரும்போது, அதற்கேற்ப மாற்றிக் கொள்ளும் பகுத்தறிவு, விஞ்ஞான அறிவு எங்களிடம் உள்ளது. நாங்கள் பழமையை கொண்டாடுவதைவிட, மரபை கொண்டாடுகிறோம்.

தமிழர்களின் வரலாறு ஆழமானது. சங்க இலக்கியத்தின் ஆழத்தை உணர முடிந்தவர்களால்தான், கீழடியின் ஆழத்தை உணர முடியும். மீண்டும் கடற்கோள் அகழாய்வு மேற்கொள்ள உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. கீழடி தமிழர் நாகரீகமா, திராவிடர் நாகரீகமா என தேவையற்ற விவாதம் எழுப்பப்படுகிறது. இந்தியாவின் பூர்வகுடிகள் திராவிடர்களே. 22 திராவிட மொழிகளின் தாய்மொழியாக தமிழ் விளங்குகிறது. இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். கீழடியின் ஆய்வு என்பது, பெரிய ஒரு உயிரினத்தின் வால் முனையை கண்டறிந்துள்ளோம். அதன் உடல், தலை, முகம் என முழுவதையும் ஆய்வு செய்யும்போது இன்னும் பல புதிய தகவல்கள் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார். இதில் தொழிலதிபர்கள் காந்தி, தங்கராஜ், ராஜேந்திரன், துளசிதாசன், தென்னலூர் பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: