டிராய் கொண்டு வரும் மாற்றங்கள், இந்தியாவை தொழில்நுட்பரீதியாக பின்தங்கிய நாடாகவே மாற்றும்: ரிலையன்ஸ் ஜியோ கருத்து

டெல்லி: தொலை தொடர்பு சேவை தொடர்பாக டிராய் கொண்டு வரும் மாற்றங்கள், இந்தியாவை தொழில்நுட்பரீதியாக பின்தங்கிய நாடாகவே மாற்றும் என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது. தொலை தொடர்பு சேவை கட்டுப்பாட்டு அமைப்பான டிராய் தற்போது நடைமுறையில் இருந்து வரும் இலவச கால் சேவை தொடர்பாக சில மாற்றங்களை வரும் ஜனவரி 1ம் தேதி 2020-ல் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

இந்தப் புதிய மாற்றங்களால் தொலை தொடர்பு நிறுவனங்கள் இனி பிறநெட் வொர்க்குகளைத் தொடர்புகொள்வதை இலவச சேவையாக வழங்க முடியாத நிலை உண்டாகும். இதன் விளைவாகவே ஜியோ நிறுவனம் சமீபத்தில் அதன் வாடிக்கையாளர்கள் பிற நிறுவன நெட்வொர்க் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்வதற்கு நிமிடத்துக்கு 6 பைசா கட்டணத்தை அறிவித்தது. ஆனாலும் பிற நெட்வொர்க்குகளுக்கு இடையிலான இணைப்புக்கு கட்டணம் விதிக்கும் நடவடிக்கையை டிராய் எடுத்திருப்பது மக்கள் விருப்பத்துக்கு மாறானது என்று ரிலையன்ஸ் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நடவடிக்கையால் உலக நாடுகள் 5ஜி தொழில்நுட்பத்தை அமல்படுத்தி முன்னேறி கொண்டிருக்கையில் இந்தியா 2ஜி அளவிலே முடங்கிவிடும் சூழலை டிராயின் முடிவுகள் உருவாக்கும். மேலும் பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவை இது தகர்க்கும் என்றும் ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.

Related Stories: