×

புரட்டாசிக்கு பிறகு வந்த முதல் ஞாயிற்றுகிழமையால் மட்டன், சிக்கன் கடைகளில் விற்பனை தூள்: முட்டை, மீன்களுக்கு கிராக்கி அசைவ பிரியர்கள் குஷி

சென்னை: ஒரு மாத புரட்டாசி விரதம் முடிந்து ஐப்பசி முதல் ஞாயிற்றுக் கிழமையான நேற்று மட்டன், சிக்கன் மற்றும் மீன் கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தமிழகம் முழுதும் புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு விரதம் கடைபிடிப்பதை பொதுமக்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதன் காரணமாக ெசன்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏராளமானோர் மீன், மட்டன், சிக்கன் போன்ற அசைவ உணவு வகைகளை சாப்பிடுவதை நிறுத்திவிடுவது வழக்கம். இதனால் புரட்டாசி மாதத்தில் சிக்கன், மட்டன், மீன், முட்டை போன்றவற்றின் விற்பனை மந்தமாகவே இருக்கும். உற்பத்தியும் பெரிய அளவுக்கு இருக்காது. இந்நிலையில் புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் துவங்கி உள்ளது. இதில் நேற்று ஐப்பசியின் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னையில் சிந்தாரிப்பேட்டை, காசிமேடு, டூமில் குப்பம், வானகரம், திருவான்மியூர் உள்பட பல இடங்களில் மீன், மட்டன், சிக்கன், முட்டை விற்பனை தூள் பறந்தது.

வியாபாரிகள் படுவேகமாக செயல்பட்டு வாடிக்கையாளர்கள் கேட்டதை கொடுத்து அனுப்பிய வண்ணம் இருந்தனர். அதேபோல திருவள்ளூர் மாவட்டத்தில் பெரியகுப்பம் மீன் மார்க்கெட், நகராட்சி மீன் மார்க்கெட், தபால் நிலையம் அருகில் உள்ள மட்டன் மற்றும் சிக்கன் கடைகளில் மக்கள் அதிகளவில் குவிந்தனர். இதனால் இறைச்சி கடைகளில் கூட்டம் வழக்கத்தைவிடவும் அதிகமாக இருந்தது. பொதுமக்கள் கியூவில் நின்று இறைச்சியை வாங்கி சென்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சி மார்க்கெட், செங்கல்பட்டு மார்க்கெட், காஞ்சிபுரம் மீனவ கிராமங்களை ஒட்டி உள்ள மீன் சந்தைகளில் விற்பனை அதிகமாக இருந்தது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘கடந்த ஒரு மாதமாகவே மீன், சிக்கன் போன்றவைகளின் விலை குறைவாக காணப்பட்டது. தற்போது ஐப்பசி மாதம் பிறந்துள்ளதாலும் அடுத்து தீபாவளி போன்ற மக்கள் அதிகம் கொண்டாடும் முக்கிய பண்டிகை வர உள்ளதாலும் அசைவ உணவுகள் பயன்பாடு அதிகம் இருக்கும். இதனால் விலையும் சற்று அதிகரிக்கும். ஐப்பசி மாதம் முடிவடைந்து, கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் ஐயப்பன் மற்றும் முருகனுக்கு மாலை அணிவித்து செல்லும் பக்தர்கள் அதிகளவு உள்ளதால் திரும்பவும் அந்த மாதத்தில் அசைவ உணவு பொருட்கள் விலை குறைய வாய்ப்புள்ளது’’ என்றனர்.

Tags : stores ,Fratasi ,Chicken Shops ,Chicken , After Mutton, Mutton, Chicken Shops, Sale, Powder
× RELATED குட்கா விற்பனை செய்த 3 மளிகை கடைகளுக்கு சீல்