செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் 50 ஏக்கரில் சர்வதேச தரம் வாய்ந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையம் அமைகிறது: தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

சென்னை: சர்வதேச தரம் வாய்ந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையம் செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 50 ஏக்கரில் அமைகிறது. இதற்காக, தற்போது 96 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழ்நாட்டில் தான் சர்வதேச தரத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, உலகத்தரம் வாய்ந்த சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி அறிவித்தார். இதை தொடர்ந்து, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது இந்த அறிக்கைக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் 96 கோடி நிதி ஒதுக்கீடு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார். இந்த மையத்திற்கான கட்டுமான பணிக்கு கடந்த அக்டோபர் 15ம் தேதி டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து நவம்பர் 6ம் தேதி டெண்டர் திறக்கப்படுகிறது. இதையடுத்து ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு முதல் கட்டுமான பணிகள் தொடங்க பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. இந்த மையத்திற்கான கட்டுமான பணி 65 கோடியும், கருவிகள் வாங்குவதற்கு 10 கோடியும், பர்னிச்சர் வாங்குவதற்கு 10 கோடியும், ஆயில் உறை வைக்கும் பைகள், பனிக்கட்டிகள், இனிமா பாத்திரம், பஞ்சு, அக்குபஞ்சர் ஊசிகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள் 40 லட்சம் செலவில் வாங்கப்படவுள்ளது.

 

இந்த மையத்தில், ஐந்தரை ஆண்டுகளுக்கான பட்டப்படிப்பு பிரிவு, 3 ஆண்டுகளுக்கான பட்ட மேற்படிப்பு பிரிவு மற்றும் ஆராய்ச்சிப் பிரிவுடன் கூடிய மருத்துவமனை, மாணவர் விடுதிகள், பணியாளர் குடியிருப்புகள் போன்றவை ஏற்படுத்தப்படுகிறது. இதற்குத் தேவையான பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இந்த மையத்தில் இயக்குனர் 1, பேராசிரியர் 14 பேர், இணை பேராசிரியர் 11 பேர், உதவி பேராசிரியர் 22 பேர், ஆசிரியர் கிரேடு 2, நூலகர் 1 உட்பட 100க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த மையத்தில் இயற்கையான சூழ்நிலையில், மிகவும் பாதுகாப்பான சிகிச்சை முறைகளான யோகா சிகிச்சை, இயற்கை உணவு சிகிச்சை, நீர் சிகிச்சை, அக்குபஞ்சர், அக்குபிரஷர், காந்த சிகிச்சை, இயற்கை மூலிகை சிகிச்சை, மண் சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, நிற சிகிச்சை போன்ற பல சிகிச்சைகள் அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: