கீழே விழுந்து பெண் காயம் பஸ் கதவுகளை மூடாவிட்டால் டிரைவர், கண்டக்டருக்கு மெமோ: போக்குவரத்துத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

சென்னை: அரசு பஸ்சில் பயணித்தபோது பெண் தவறி விழுந்ததையடுத்து, கதவுகளை மூடாமல் பஸ்களை இயக்கும் ஓட்டுனர், நடத்துனருக்கு மெமோ வழங்கி, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குமாரபாளையம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்தவாரம் அரசு பஸ் ஒன்றில் பயணித்தார். உட்காருவதற்கு இடம் கிடைக்காததால், படிக்கட்டுக்கு அருகில் நின்று கொண்டு பயணித்ததாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட பஸ், சர்வீஸ் சாலையில் வேகமாக திரும்பியுள்ளது. அப்போது அந்த பெண் பஸ்சிலிருந்து வெளியில் தூக்கி வீசப்பட்டார். சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு, சாலை ஓரத்திலிருந்த கால்வாயில் விழுந்தார். இதனை பார்த்த சக பயணிகள் கூச்சலிட்டனர். பிறகு அவரை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த வீடியோ சமூகவலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போக்குவரத்துத்துறை சார்பில், அனைத்து பஸ்களிலும் கதவுகள் சரியாக மூடப்படுகிறதா என்பது குறித்து, அவ்வப்போது திடீர் ஆய்வு செய்யப்படுகிறது. மூடவில்லை என்றால் ஓட்டுனர், நடத்துனருக்கு மெமோ வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமாக சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட இடங்களில் கோட்டங்கள் உள்ளன. இதன் மூலமாக தினசரி 19 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் பெரும்பாலானவற்றின் கூட்டம் எப்போதும் அதிகமாகவே இருக்கும்.குறிப்பாக பள்ளி, கல்லூரிக்கு மாணவர்கள் செல்வதால், காலை, மாலை நேரங்களில் கூட்டம் மிகுந்து காணப்படும். அப்போது ஓட்டுனர், நடத்துனரால் கதவை மூடி பஸ்களை இயக்க முடியாது. அவ்வாறு மூடும்பட்சத்தில், பயணிகளுக்கு சிரமம் ஏற்படும். இதனாலேயே ஓட்டுனர், நடத்துனர் பஸ்களில் கதவுகளை மூடுவதில்லை. கடந்த வாரம் பெண் ஒருவர் கீழே விழுந்ததையடுத்து, அவ்வப்போது சோதனை நடத்தி கதவுகளை மூடாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் கூடுதலாக பஸ்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அதிகப்படியான பஸ்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் கதவுகளை மூடாத இயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இதேபோல் ஒருசில பஸ்களில் கதவு வசதியும் இல்லை. அவற்றில் வசதியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: