ஆந்திராவில் இருந்து 23 நாளில் பூண்டி ஏரிக்கு 1.2 டிஎம்சி தண்ணீர் வந்தது: புழல் ஏரிக்கு 400 கனஅடி திறப்பு

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு, 23 நாட்களில் 1.2 டிஎம்சி கிருஷ்ணா நீர் வரத்தால், ஏரியின் நீர்மட்டம் 27.5 அடியாக உயர்ந்துள்ளது. தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று ஆந்திர அரசு கிருஷ்ண நதிநீர் பங்கீடு திட்டத்தின்கீழ், கடந்த மாதம் 25ம் தேதி காலை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு, வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்தது. தொடர்ந்து படிப்படியாக வினாடிக்கு 2,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்த தண்ணீரானது 28ம் தேதி நள்ளிரவு பூண்டி ஏரியை வந்தடைந்தது. சராசரியாக வினாடிக்கு 800 கன அடி வீதம் ஏரிக்கு தண்ணீர் வந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இந்நிலையில், கண்டலேறு அணையில் நீர்திறப்பு வினாடிக்கு 1,300 கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால், பூண்டி ஏரிக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 625 கன அடி நீர் வந்துகொண்டு இருக்கிறது.

நேற்று நிலவரப்படி 1,220 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. கிருஷ்ணா நீர்வரத்துக்கு முன் ஏரியில் 12.25 அடி நீர்மட்டம் இருந்தது. இந்த நீர்மட்டம் தற்போது 27.5 அடியாக உயர்ந்துள்ளது. அதாவது, 23 நாட்களில் 15.25 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கண்டலேறு அணையில் இருந்து 23 நாட்களில் 1.2 டிஎம்சி தண்ணீர் இதுவரை பூண்டி ஏரிக்கு வந்துள்ளது. பூண்டி ஏரிக்கு தொடர்ந்து கிருஷ்ணா நீர் வந்து கொண்டு இருப்பதால் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதையடுத்து, கடந்த 6ம் தேதி சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 24 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தொடர்ந்து சென்னை மாநகர மக்களின் தீர்க்க கடந்த 12ம் தேதி ‘லிங்க்’’ கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து படிப்படியாக வினாடிக்கு 400 கன அடி வீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

Related Stories: