×

4375 வாகனங்களை நிறுத்தும் வகையில் 80 இடங்களில் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம்: 15 நாட்களில் செயல்பாட்டுக்கு வருகிறது

சென்னை: சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்துவதற்கு ஏதுவாக ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் 15 நாட்களில் சென்னையில் செயல்படுத்தப்படவுள்ளது. சென்னையில் சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்த செல்வதற்கு ஏதுவாக ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னையில் உள்ள அனைத்து சாலைகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது. அதன்முடிவில் 471 சாலைகளில் 12,047 கார்களை நிறுத்துவதற்கான இடம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த இடங்களை எல்லாம் இணைத்து ஒருங்கிணைந்த ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு ₹7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக டாருக் (பி) நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 80 இடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பாக ஸ்மார்ட் பார்க்கிங் திட்ட அதிகாரிகள் கூறியதாவது : அண்ணா நகர், பெசன்ட் நகர், புரசைவாக்கம், தி.நகர், காதர் நவாஸ்கான் சாலை, வாலாஜா சாலை, மெரினா  உள்ளிட்ட 15 பகுதிகளில் 80 இடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த இடங்களில் மொத்தம் 4,375 கார்களை நிறுத்தும் அளவிற்கான இடங்கள் உள்ளன. இவற்றில் 20 சதவீத இடங்களில் இரு சக்கர வாகனங்களுக்கும், 5 சதவீத இடங்கள் மாற்றுத்திறனாளிகளின் வாகனங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை கண்காணிக்க மொத்தம் 460 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.


இரு சக்கர வாகன வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு  ₹5 கட்டணமாகவும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ₹20 கட்டணமாகவும் வசூலிக்கப்படும். கட்டணத்தை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வழியாகவும் செலுத்தலாம். பொதுமக்கள் 24 மணி நேரத்திக்குள் வாகனத்தை எடுத்துவிட வேண்டும். இல்லாவிடில் அபராதம் விதிக்கப்படும். ஆம்புலனஸ், தீயணைப்பு துறை வாகனங்கள் மற்றும் காவல் துறை ரோந்து வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படமாட்டது. இந்த திட்டம் 15 நாட்களில் நடைமுறைப்படுத்தபடவுள்ளது. தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்றுவருகிறது. பொதுமக்கள் GCC Smart Parking என்ற செயலியை சொல்போனில் பதிவிறக்கம் செய்து மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவு செய்ய வேண்டும். இதன்பிறகு நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் எத்தனை வாகன நிறுத்துமிடங்கள் காலியாக உள்ளது என்ற தகவல் உங்களுக்கு காட்டப்படும். அதன்படி அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தை கொள்ளலாம். எனவே பொதுமக்கள் சோதனை செய்து பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து பாரிமுனை, ஜார்ஜ் டவுன், அடையாறு, அண்ணாசாலை,  நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், கிண்டி, வண்ணாரப் பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தபடவுள்ளது.


Tags : locations ,parking spaces , 4375 vehicles, 80 parking spaces, smart parking, plan
× RELATED தங்கக்கடத்தல் தொடர்பாக கேரளாவில் 5...