×

மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து வங்கி ஊழியர்கள் நாளை ஸ்டிரைக்

சென்னை: மத்திய அரசின் வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை கண்டித்து நாளை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், வங்கி சேவை அடியோடு முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் 10 பொதுத்துறை வங்கிகளை இணைத்து 4 வங்கிகளாக மாற்றப்படும் என்று அதிரடியாக அறிவித்தார். அதாவது யூனைடெட் பேங்க் ஆப் இந்தியா, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கிகள் பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும், சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடன், அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடனும், ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வங்கிகள் இணைப்பு திட்டத்துக்கு வங்கி அதிகாரிகள், வங்கி ஊழியர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வங்கிகள் இணைப்பால் வாடிக்கையாளர்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுவார் என்றும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே வங்கிகள் இணைப்பு திட்டத்தை கைவிட கோரி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம், தர்ணா என்று பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் வங்கி அதிகாரிகளும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் வங்கிகள் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு 22ம் தேதி(நாளை) ஒரு நாள் ஸ்டிரைக்கிற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்திற்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், நாளை வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொது செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது: மத்திய அரசு வங்கிகள் இணைப்பு திட்டத்தை மறுபரிசீனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளனர். இந்த போராட்டத்தில் சுமார் 3 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் 30,000 வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்பார்கள். அன்றைய தினம் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு வங்கி ஊழியர்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது. நாளை வங்கிகள் திறந்திருக்கும். ஆனால், வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் வங்கி சேவை வெகுவாக பாதிக்க வாய்ப்புள்ளது. வங்கி இணைப்பால்  பொதுமக்கள் தான் அதிகம் பாதிப்புக்குள்ளாவார்கள். எனவே, எங்களுடைய  போராட்டத்தில் பொதுமக்கள்  முழு ஆதரவு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.வங்கிகளில் ஊழியர்கள் தான் பணம் பெறுதல், பணம் வழங்குதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டுமல்லாமல் காசோலை அளித்தல், செக் பரிவர்த்தனையையும் அவர்கள் தான் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கால் வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதே நேரத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. இதனால், தீபாவளி தேவைக்கு தேவையான அளவு பணத்தை இன்றே வங்கிகளுக்கு சென்று எடுத்து கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags : Bank employees ,Government ,Central ,Strike ,Bank Staff , Central Government, Action, Condemnation, Bank Staff, Tomorrow, Strike
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...