×

எம்.ஜி.ஆர். நிகர்நிலை பல்கலை. சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம்

சென்னை : டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகத்தின் 28வது பட்டமளிப்பு விழா அதன் நிறுவனர் ஏ.சி.சண்முகம் தலைமையில் சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.இந்த விழாவுக்கு பல்கலைக்கழக தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார் முன்னிலை வகித்தார். விழாவில் பல்கலைக்கழக வேந்தர் ஆர்.எம்.வாசகம் வரவேற்புரை நிகழ்த்தினார். பட்டமளிப்பு விழா அறிக்கையை துணைவேந்தர் கே.மீர் முஸ்தபா ஹூசைன் வாசித்தார். இந்த பட்டமளிப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வாழ்க்கை வரலாறு குறித்து வீடியோ காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் (டி.ஆர்.டி.ஓ.) தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி, கோவை கங்கா மருத்துவமனையின் தலைவர் எஸ்.ராஜசபாபதி, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், நடிகை ஷோபனா ஆகியோருக்கு ஏ.சி.சண்முகம். கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார்.விழாவில் 2481 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களையும், பரிசுகளையும் முதல்வர் பழனிசாமி வழங்கினார்.மேலும் இந்த பட்டமளிப்பு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, அன்பழகன், பெஞ்சமின்,  பாண்டியராஜன், முதன்மை கல்வியாளர் கோபாலகிருஷ்ணன், கோதண்டன், இணை மற்றும் துணைவேந்தர்கள் ரவிச்சந்திரன், பத்மனாபன், ஜெயச்சந்திரன், பதிவாளர் பழனிவேலு, மற்றும் காவல்துறை, அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


பின்னர் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: தமிழகத்தல் 2019-20 பட்ஜெட்டில் உயர் கல்விக்காக 4584 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளதால் என்னுடைய பொறுப்புகள் மேலும் அதிகமாகியுள்ளன. 12-ம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். விரைவில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும். இந்த காலகட்டத்தில் நவீன தொழில்நுட்பத்தை மாணவர்கள் சிறப்பாக பயன்படுத்த வேண்டும். அரசு வழங்கும் இலவச லேப்டாப் இதற்கு உதவியாக இருக்கும்.
மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. தமிழக மாணவர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் ஏட்டுக்கல்வியுடன், வாழ்க்கை கல்வியையும் கற்க வேண்டும். ஏட்டுக்கல்வி மட்டுமே மாணவர்களுக்கு எப்போதும் உதவாது. இவ்வாறு பேசினார்.

Tags : MGR ,Edappadi Palanisamy. Edappadi Palanisamy ,Universal University , Edappadi Palanisamy, Honorary Doctor, Degree
× RELATED டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில்...