கடைசி நாளுக்கு முதல் நாள் திடீரென பரபரப்பு: 75 கோடி வெள்ளத்தடுப்பு பணி டெண்டர் தள்ளிவைப்பு: கான்ட்ராக்டர்கள் எதிர்ப்பால் நடவடிக்கை

சென்னை: 75 கோடி மதிப்பிலான வெள்ளத்தடுப்பு பணிக்கு டெண்டர் திறக்க கான்ட்ராக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அது தள்ளி வைக்கப்பட்டது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2015ல் பெய்த கனமழை காரணமாக மழை நீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இந்த மழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகள் கடுமையான சேதமடைந்தது. இந்த சேதமதிப்பு சுமார் 15 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என்று தமிழக அரசு தனது அறிக்கையில் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மழையால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் கண்டறிந்து, அந்த இடங்களில், மழை நீர் தேங்குவதை தடுக்கும் வகையில், 2400 கோடி செலவில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து முதற்கட்டமாக 100 கோடி செலவில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் வெள்ளத்தடுப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

தொடர்ந்து, தற்போது இரண்டாவது கட்டமாக வெள்ளத்தடுப்பு பணி மேற்கொள்ள 244 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதில் 75 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளுக்கு கடந்த அக்டோபர் 1ம் தேதி டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து ஆன்லைனில் அந்த டெண்டர் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து கான்ட்ராக்டர்கள் ஒப்பந்தபுள்ளி பெட்டியில் போட வேண்டும். ஆனால், கடந்த 16ம் தேதி தான் ஆன்லைனில் டெண்டர் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் அக்டோபர் 17ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என்ற நிலையில் பெரும்பாலான கான்ட்ராக்டர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள பாலாறு வட்ட வடிநில கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் டெண்டர் திறப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கான்ட்ராக்டர்கள் பலர் விண்ணப்பிக்காத நிலையில் டெண்டர் திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இதை தொடர்ந்து டெண்டர் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் பொதுப்பணித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: