சென்னையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ரூட் தல மோதல்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பட்டாக்கத்தியுடன் மாணவர்கள் மோதல்

* ஆர்பிஎப் வீரர் வேகமாக செயல்பட்டதால்  மாணவன் உயிர் தப்பியது n பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்

சென்னை: சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே ரூட் தல பிரச்னையால் அடிக்கடி பொது இடங்களில் மோதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் பச்சையப்பன் கல்லூரி, மாநிலக்கல்லூரி, நந்தனம் கலைக்கல்லூரி, புதுக்கல்லூரி மாணவர்கள் தான் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே கடந்த ஜூலை 23ம் தேதி ரூட் தல மோதலில் பஸ்சை வழிமறித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நடுரோட்டிலேயே ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டனர். அதை தொடர்ந்து மாணவர்களுடனான ரூட் தல பிரச்னைக்கு முடிவு கட்ட சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அனைத்து துணை கமிஷனர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி போலீசார் பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி, புதுக்கல்லூரி முதல்வர்களுடன் மாணவர்களின் மோதலை தடுக்க ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் ரூட் தல மோதலில் ஈடுபட்டு வரும் 90 மாணவர்களை அடையாளம் காணப்பட்டது. அதன் பிறகு மாணவர்களிடமும் போலீசார் 107 சட்ட பிரிவின் கீழ் ஓராண்டு நன்னடைத்தை சான்றிதழில் கையெழுத்து வாங்கி அவர்களை கண்காணித்து வந்தனர். அதைதொடர்ந்து கல்லூரி மாணவர்களிடையே மோதல் சம்பவம் குறைந்தது.

 

இந்நிலையில் நந்தனம் கல்லூரி மாணவர்கள் மற்றும் புதுக்கல்லூரி மாணவர்களிடையே ரூட் தல பிரச்னை தொடங்கியது. நேற்று முன்தினம் காலை 18 கே மாநகர பேருந்தில் செல்லும்போது, நந்தனம் கல்லூரி மாணவர்கள் நாங்கள் தான் இந்த ரூட்டுக்கு தல என்று கூறி புதுக்கல்லூரி மாணவர்களை மிரட்டி பாதி வழியில் இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் சம்பவம் குறித்து தங்களுடைய சீனியர் மாணவர்களிடம் தெரிவித்தனர். அதைதொடர்ந்து நந்தனம் கல்லூரி மாணவர்களை பழிவாங்கும் வகையில் புதுக்கல்லூரி மாணவர்கள் பட்டாக் கத்தியுடன் சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு உள்ள பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் மாலையில் காத்திருந்தனர். அப்போது, வழக்கம்போல் சைதாப்பேட்டையில் இருந்து உயர் நீதிமன்றம் நோக்கி சென்ற 18 கே மாநகர பஸ், சென்ட்ரல் ரயில் நிலைய பஸ் நிறுத்தத்திற்கு வந்தது. அப்போது, பஸ்சில் இருந்து நந்தனம் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் இறங்கினர். இதை கவனித்த புதுக்கல்லூரி மாணவர்கள், திடீரென பட்டாக்கத்தியுடன் நந்தனம் கல்லூரி மாணவர்களை வெட்டப் பாய்ந்தனர். இதை கவனித்த நந்தனம் கல்லூரி மாணவர்கள் உயிருக்கு பயந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது ஏற்கெனவே  மோதலில் ஈடுபட்ட மாணவனை குறிவைத்து வெட்ட முயன்றனர். உடனே அந்த மாணவர் தனது உயிரை காத்துக் கொள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் ஓடினார். ஆனால் புதுக்கல்லூரி மாணவர்கள் விடாமல் பின் தொடர்ந்து ரயில் நிலையத்திற்குள் ஓடினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ஒருவர் இதை கவனித்து துணிச்சலுடன் பட்டாக்கத்தியுடன் வந்த மாணவனை மடக்கி பிடித்து அவனிடம் இருந்து பட்டாக்கத்தியை பறிமுதல் செய்தார். இதை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் சிறிது நேரம் சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

ரயில்வே பாதுகாப்பு படை வீரரிடம் ஒரு மாணவன் சிக்கிய உடன் அவருடன் வந்த மற்ற மாணவர்கள் அங்கிருந்து சிதறி ஓடிவிட்டனர். பிறகு பிடிபட்ட மாணவனை பாதுகாப்பு படை வீரர் பூக்கடை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.அதன்படி போலீசார் மாணவனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது(20) என்றும், இவன் புதுக்கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருவது தெரியவந்தது. இவன் ரூட் தல பிரச்னையில் நந்தனம் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வரும் அரக்கோணம், கண்டிகையை சேர்ந்த மாணவன் தரன், அரக்கோணம் அருகே உள்ள வேதபுரத்தை சேர்ந்த நாகராஜ் மற்றும் குருவராஜபேட்டையே சேர்ந்த துளசிராமன் ஆகிய 3 மாணவர்களை கொலை செய்யும் நோக்கில் பட்டாக்கத்தியுடன் வந்தது தெரியவந்தது. இதையடுத்து, பூக்கடை போலீசார் மாணவன் சாகுல் ஹமீது மீது கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். அவனிடம் இருந்து ஒன்றரை அடி நீள பட்டாக்கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு சக மாணவர்களை போலீசார் சிசிடிவி பதிவு மூலம் தேடி வருகின்றனர். அதில், திருவள்ளூர் மாவட்டம் பொளத்தூர்பேட்டையை சேர்ந்த புதுக்கல்லூரி மாணவன் முகமதுல்லா என்பவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: