தமிழகத்தில் 1,170 கோடியில் 3 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க முடிவு

* திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

* மருத்துவ கல்வி இயக்குனரகம் பொதுப்பணித்துறைக்கு அவசர கடிதம்

சென்னை: தமிழகத்தில் 1,170 கோடி செலவில் 3 புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து அனுப்பி வைக்க மருத்துவக்கல்வி இயக்குனரகம் தமிழக பொதுப்பணித்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது. நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் வரும் 2020-2021ம் நிதியாண்டில் 75 புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அந்தெந்த மாநில அரசுகள் சார்பில் அறிக்கை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதில், தமிழக அரசு சார்பில் நீலகிரி, திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கு அறிக்கை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் 6 மருத்துவ கல்லூரிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலும், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, மற்றும் நாகை மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி  அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து அனுப்பி வைக்குமாறு மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயணபாபு தமிழக பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜாமோகனுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் மத்திய அரசிடம் 3 கல்லூரி அமைப்பதற்கான கட்டுமான பணிக்கு நிதி கேட்டு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து அனுப்ப வேண்டியுள்ளது. எனவே, விரைவாக அறிக்கை தயார் செய்து அனுப்பி வைத்தால் தான் மத்திய அரசின் நிதியை பெற முடியும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியில் கண்காணிப்பு பொறியாளர் பாண்டியராஜன் தலைமையிலான பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அறிக்கை இந்த வாரத்திற்குள் இறுதி செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக விரைந்து அனுப்பி  வைக்கப்படும். ஏற்கனவே 6 மருத்துவக்கல்லூரி இடம் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடத்தில் கட்டுமான பணி அமைப்பது தொடர்பாக அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதே போன்று இந்த 3 மருத்துவக்கல்லூரிகளுக்கும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு கட்டுமான பணிக்கு ஆகும் செலவு தொடர்பாக அறிக்கை தயாரிக்கும் பணி நடக்கிறது. தற்போது 9 மருத்துவக்கல்லூரிகளும் குறைந்தது 370 கோடி முதல் அதிகபட்சம் 390 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இதில், மத்திய அரசு 240 கோடியும் மீதமுள்ள தொகை மாநில அரசு நிதி ஒதுக்கீட்டின் மூலம் பணிகள் நடைபெறுகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறும் போது, எம்சிஐ விதிகளின் படி கட்டுமான பணிக்கு அறிக்கை தயாரித்து அனுப்பப்படுகிறது. தற்போது அறிக்கை தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் அறிக்கை அனுப்பி வைக்கப்படும்’ என்றார்.

Related Stories: