ரயில்வேயில் வேலை என போலி நியமன கடிதம் தந்து 20 லட்சம் சுருட்டல் கோவையில் ஒருவர் கைது

கோவை: ரயில்வேயில் வேலை என போலி நியமன கடிதம் கொடுத்து ரூ.20 லட்சம் சுருட்டியவர் கைது செய்யப்பட்டார்.  கோவை வைசியாள் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). தனியார் மோட்டார் தயாரிப்பு நிறுவன தொழிலாளி. இவருடன் திருநெல்வேலி வாசுதேவநல்லூர் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் (43) என்பவரும் பணிபுரிந்து வந்தார். ஜெகநாதன் தனது மனைவி ரயில்வே துறையில் பணியாற்றுவதாக கூறி, பணம் கொடுத்தால் ரயில்வேயில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும் என தன்னுடன் பணியாற்றுபவர்களிடம் கூறி வந்துள்ளார். இதை நம்பிய ராஜேந்திரன், தனது இரு மகள், மருமகன், உறவினர் உட்பட 10 பேருக்கு வேலை வாங்கி தருமாறு ஜெகநாதனிடம் ரூ.20 லட்சம் கொடுத்துள்ளார். சில நாட்களுக்கு பிறகு, ராஜேந்திரனிடம், திருச்சி ரயில் நிலையத்தில் பணியில் சேருவதற்கான வேலை நியமன அனுமதி கடிததத்தை ஜெகநாதன் கொடுத்தார்.

இந்த கடிதத்துடன் 10 பேரும் திருச்சி ரயில் நிலையம் சென்றனர். கடிதத்தை பார்த்த ரயில்வே அதிகாரிகள் யாருக்கும் பணி வழங்கப்படவில்லை, கடிதம் போலியானது என தெரிவித்தனர். ஏமாற்றப்பட்டதை அறிந்த ராஜேந்திரன் உட்பட 10 பேர் கோவை ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து ஜெகநாதனை கைது செய்தனர். ஜெகநாதன், திருச்சியில் சில ஆண்டு வசித்து  காய்கறி கடை நடத்தி வந்துள்ளார். முதல் மனைவியை பிரிந்த இவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு கோவை வந்துள்ளார். கோவையில் வேலை ெசய்த இடத்தில் மனைவி ரயில்வே ஊழியர் எனக்கூறி ஏமாற்றியுள்ளார். இவர் ரயில்வே நிர்வாகத்தின் முத்திரையுடன் ஏராளமான போலி நியமன கடிதங்களை தன் வீட்டில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Related Stories: