×

44 லட்சம் நகை கொள்ளை வழக்கு உ.பி.யில் பிடிபட்ட 2 பேர் கோவை போலீசிடம் ஒப்படைப்பு

கோவை: கோவையை சேர்ந்த நகை பட்டறை ஊழியரிடம் ரூ.44 லட்சம் நகைகளை கொள்ளையடித்த 2 பேர் உ.பி போலீசில் சிக்கினர். அவர்கள் கோவை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கோவை செல்வபுரம் அசோக் நகரை சேர்ந்த முரளி நரசிம்மன் (40). தங்க பட்டறை உரிமையாளர். இவரது பட்டறையில் செட்டி வீதியை சேர்ந்த முரளி (50) என்பவர் வேலை செய்து வந்தார். கடந்த மாதம் 24ம் தேதி கர்நாடகா மாநிலம் தும்கூரில் உள்ள நகை கடைகளுக்கு 1,268 கிராம் எடை கொண்ட தங்க நெக்லஸ், தங்க காசு மாலை, தங்க வளையல் ஆகியவற்றை முரளி கொடுத்து  அனுப்பினார். ரூ.44 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை தனி பேக்கில் போட்டு கொண்டு காந்திபுரத்திலிருந்து பெங்களூர் செல்ல தயாராக இருந்த தனியார் ஆம்னி பஸ்சில் ஏறினார். 25ம் தேதி அதிகாலை ஆம்னி பஸ் பெங்களூர் சென்றடைந்தது. பின்னர் தும்கூருக்கு கர்நாடக மாநில பஸ்சில் சென்று லாட்ஜில் அறை எடுத்து முரளி தங்கினார்.

சிறிது நேரம் தூங்கிவிட்டு பேக்கை திறந்து பார்த்தபோது நகைகளை காணவில்லை. பின்னர் கோவை திரும்பிய முரளி, இது குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து  விசாரித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 12ம் தேதி நகை கொள்ளையர் 2 பேரை உத்தர பிரதேச மாநிலம் பரேலி போலீசார் பிடித்தனர். அவர்கள் உ.பி பிஜ்னோர் பகுதியை சேர்ந்த எக்சான் (47), தேவேந்தர் (25) என தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ.44 லட்சம் மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்தனர். பஸ்சில் தூங்கிய முரளியிடம் இருந்து நகைகளை திருடியதாக தெரிவித்தனர். இந்நிலையில், கோவை ேபாலீசார் உபி சென்று எக்சான், தேவேந்தர் ஆகியோரை தங்களிடம் ஒப்படைக்க கோரினர். அதன்படி இருவரையும், கைப்பற்றிய நகைகளையும் ஒப்படைத்தனர். அவர்களை அழைத்து கொண்டு போலீசார் இன்று கோவை வருகின்றனர்.


Tags : UP , 44 lakh jewelery, robbery case, 2 people caught in UP, handed over to police, police
× RELATED உ.பியில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது: அகிலேஷ் நம்பிக்கை