கமுதியில் ஒரே வீட்டில் வசிக்கும் கணவர் ஒரு வார்டு மனைவி வேறு வார்டு: மறுவரையறையில் குளறுபடி கருப்புக்கொடி போராட்டம்

கமுதி: கமுதி பகுதியில் வார்டு மறுவரையறையில் குளறுபடி உள்ளதை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் அருந்ததியர் சமுதாய மக்கள் காளியம்மன் கோயில் தெருவில் 2 ஆயிரத்திற்கும் மேல் வசிக்கின்றனர். இது 15வது வார்டு பகுதியை சேர்ந்தது. தற்போது வார்டு மறுவரையறை என்ற பெயரில் இந்த வார்டு பகுதியில் உள்ள வாக்காளர் சிலரை 13வது வார்டிலும், பலரை 14வது வார்டிலும் இணைத்துள்ளனர். ஒரே வீட்டில் கணவர் ஒரு வார்டிலும், மனைவி ஒரு வார்டிலும் இணைக்கப்பட்டனர்.

இதனை கண்டித்து இப்பகுதி மக்கள் தெருக்களிலும், அனைத்து வீடுகளிலும் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடி கட்டியுள்ளனர். அவர்கள் கூறுகையில், ‘‘வார்டு மறுவரையறையை மறு ஆய்வு செய்ய கோரி பேரூராட்சி செயல் அலுவலர், கலெக்டரிடம் மனு அளித்தோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். இதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பேரூராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போடுவோம். ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆகியவற்றை ஒப்படைப்போம்’’ என்றனர்.

Related Stories: