வேலையை விட்டு அனுப்பிவிடுவேன் என்பதா? திருவண்ணாமலை கலெக்டருக்கு எதிராக 3 கட்ட போராட்டம்: ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் அறிவிப்பு

திருவண்ணாமலை: வேலையை விட்டு அனுப்பிவிடுவேன் என்று மிரட்டல் விடுத்த திருவண்ணாமலை கலெக்டர் நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 3 கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று மாநில பொதுச்செயலாளர் கூறினார். திருவண்ணாமலை மாவட்டத்தில் பயனாளிகளுக்கு பசுமைவீடு ஒதுக்காதது தொடர்பாக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்த உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலையில் நேற்று நடந்தது.பின்னர் மாநில பொதுச்செயலாளர் பாரி, நிருபர்களிடம் கூறியதாவது: திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கடந்த வெள்ளிக்கிழமை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் வாட்ஸ்அப் குழுவில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் தொடர்பாக ஒரு ஆடியோ பதிவினை வெளியிட்டுள்ளார். அது ஊழியர்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநில அளவிலும் இந்த துறை ஊழியர்கள் மிகுந்த கோபத்துடன் இருக்கிறார்கள்.

இத்திட்டத்தில் வீடு வழங்க வேண்டும் என்றால் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு பட்டியலில் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். அதன்படி, இந்த மாவட்டத்தில் 56,427 பேர் இப்பட்டியலில்  இடம் பெற்றுள்ளனர். இதில் இதுவரை 18,443 பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களில் சிலருக்கு வீட்டுமனை பட்டா கிடையாது. பெரும்பாலோருக்கு வீடுகளை கட்ட பொருளாதார வசதி இல்லை. இதனால் அவர்கள் வீடு கட்டுவதற்கு முன்வருவது கிடையாது. இந்த சூழ்நிலையில் கலெக்டர் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தான் இந்த வீடுகள் கட்டுவதற்கு தடையாக இருக்கிறார்கள் என்று ஒரு தவறான செய்தியை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் ஒரு மிரட்டல் போக்கினையும் இந்த துறை ஊழியர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறார்.

ஊழியர்களைப் பார்த்து உங்கள் அனைவரையும் வருகின்ற திங்கட்கிழமை வேலையை விட்டு அனுப்பிவிடுவேன் என்று கூறுவது ஏற்புடையது இல்லை. இத்திட்டத்தில் இருக்கின்ற பிரச்னைகளை தயவு செய்து அவர் புரிந்து கொண்டு அந்த பிரச்னைகளை எப்படி கையாள்வது, ஊழியர்களை எப்படி இணைத்துக் கொண்டு இந்த திட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது என்று அவர் சிந்தித்து செயலாற்ற வேண்டும். மேலும் இத்தகைய நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தியும், பிடிஓக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து வாட்ஸ் அப் குழுவில் ஆடியோ பதிவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாளை (இன்று) திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் பணி புரியும் அனைத்து ஊழியர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்வது,22ம் தேதி பிஎம்ஒய்ஏ திட்டத்தில் இருக்கின்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து விளக்க கூட்டம் அனைத்து வட்டாரங்களிலும் மதியம் 1 மணிக்கு நடத்துவது, வரும் 25ம் தேதி சென்னை ஊரக வளர்ச்சித்துறை இயக்குனரிடம் முறையீடு அளிப்பது,  மனித உரிமை ஆணையத்திடம் முறையிடுவது என்ற மூன்று கட்ட போராட்டங்கள் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார். பெண் பயனாளி ஆடியோ ைவரல்: இதனிடையே பெண் பயனாளி ஒருவர், வீடு வழங்கியதற்கு பிடிஓ அலுவலக அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக புகார் தெரிவிக்கும் ஆடியோ, சமூக வலைதளத்தில் பரவி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories: