விஜய் ஹசாரே டிராபி அரை இறுதியில் குஜராத்: டெல்லி ஏமாற்றம்

பெங்களூரு: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் அரை இறுதியில் விளையாட குஜராத் அணி தகுதி பெற்றது.ஜஸ்ட் கிரிக்கெட் அகடமி மைதானத்தில் நேற்று நடந்த கால் இறுதியில் குஜராத் - டெல்லி அணிகள் மோதின. டாசில் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. டெல்லி அணி 49 ஓவரில் 223 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. கேப்டன் துருவ் ஷோரி அதிகபட்சமாக 91 ரன் (109 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார்.

நிதிஷ் ராணா 33, ஹிம்மத் சிங் 26, லலித் யாதவ் 28 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். குஜராத் பந்துவீச்சில் சிந்தன் கஜா, அர்ஸன் நக்க்வஸ்வாலா தலா 3, பியுஷ் சாவ்லா 2, ரூஷ் களரியா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 224 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது..

கேப்டன் பார்திவ் பட்டேல் - பிரியங்க் பாஞ்ச்சால் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 23 ஓவரில் 150 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. இருவரும் அரை சதம் விளாசினர். பார்திவ் 76 ரன் (60 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்), பாஞ்ச்சால் 80 ரன் (91 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தனர். மெராய் 5, ஜுனேஜா 8 ரன்னில் பெவிலியன் திரும்ப, குஜராத் அணி 37.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 225 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. துருவ் ராவல் 34, அக்சர் பட்டேல் 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற குஜராத் அணி அரை இறுதிக்கு முன்னேறியது.Tags : semi-final ,Vijay Hazare Trophy ,Gujarat: Delhi disappointed. ,Gujarat ,Delhi , Vijay Hazare,Trophy,semi-final,Gujarat, Delhi disappointed
× RELATED ஐஎஸ்எல் அரையிறுதியில் யார் மும்பை-சென்னை இன்று மோதல்