×

தண்டையார்பேட்டை கோட்டத்தில் 700 மின் வாரிய ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் கிடைக்குமா?: போராட்டம் நடத்த முடிவு

திருவொற்றியூர்: தமிழ்நாடு மின்சார வாரியம், தண்டையார்பேட்டை கோட்டத்திற்கு உட்பட்ட தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர், மணலி புதுநகர் மற்றும் மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் 20  மின்வாரிய அலுவலகங்கள், 10 துணை மின் நிலையங்கள்,  4 மின்தடை பழுது பிரிவு மற்றும் 1 துணை பண்டகசாலை போன்றவை அமைந்துள்ளன. இங்கு, சுமார் 700க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் கள பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பணிபுரியும் சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்களுக்கு நேற்று போனஸ் வழங்கப்பட்டது. ஆனால், தண்டையார்பேட்டை கோட்டத்தில் பணிபுரியும் 700  தொழிலாளர்கள் மற்றும் தண்டையார்பேட்டை கோட்ட வருவாய் பிரிவு அலுவலர்கள் சுமார் 30 பேருக்கு மட்டும்  நேற்று  போனஸ் வழங்கப்படவில்லை, என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மின்வாரிய ஊழியர்கள் கூறுகையில், ‘‘தண்டையார்பேட்டை மின் கோட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதாந்திர ஊதியம், கடன்கள், பணப் பயன்கள், மருத்துவ செலவு போன்றவைகளை பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

இங்கு இளநிலை உதவியாளராக பணிபுரியும் ஒருவர் ஓய்வுபெற்று பல ஆண்டுகள் ஆகியும், அலுவலகத்தை விட்டு வெளியேறாமல் தொடர்ந்து இந்த தண்டையார்பேட்டை மின் கோட்டத்திலேயே அலுவலக பணிகளை செய்து வருகிறார். இவர் தனது அதிகாரத்திற்கு  அடங்குபவர்களுக்கு சலுகை காட்டுவதும், தட்டிக் கேட்பவர்களுக்கு வேண்டுமென்றே  பணப்பயன்கள் மற்றும் போனஸ் உள்ளிட்டவை கிடைக்காமல் இருக்க காலதாமதம் செய்து வருகிறார். இதனால் இங்கு திறமையாக பணிபுரிந்த பலர் இந்தக் கோட்டத்தை விட்டு வேறு இடத்திற்கு இடம் மாறி சென்று விடுகின்றனர். இதனாலேயே தற்போது போனசும் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதற்கு தண்டையார்பேட்டை கோட்ட நிர்வாக அலுவலரும் உடந்தையாக உள்ளார். அதிகாரப்பூர்வ இளநிலை பொறியாளரை நியமிக்க வேண்டுமென்று மின்வாரிய தலைமை பொறியாளருக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. உடனடியாக போனஸ் வழங்கவில்லை என்றால் போராட்டம்  நடத்த முடிவு செய்துள்ளோம்,’’ என்றனர்.

Tags : Electricity Board Employees , 700 Electricity Board ,Employees,Getting, Diwali Bonus?
× RELATED மின் பகிர்மான வட்ட செயற்குழு கூட்டம்