பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்: தீவிரவாத முகாம்கள் அழிப்பு: பாக். ராணுவ வீரர்களும் பலி

குப்வாரா: காஷ்மீருக்குள் தீவிரவாதிகளை ஊடுருவ வைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்ததால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நேற்று பீரங்கி தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாத முகாம்கள் அடியோடு அழிக்கப்பட்டன; பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் தீவிரவாதிகள் சிலர் பலியாயினர். காஷ்மீரின் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் கடந்த பிப்ரவரியில் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் பலியாயினர். இதற்கு பழிவாங்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான பாலகோட் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு வீசியது. அப்போது முதல் இரு நாடுகள் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது.

காஷ்மீரில் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில், சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவையும் மத்திய அரசு ரத்து செய்தது. இது பாகிஸ்தானை மேலும் ஆத்திரப்படுத்தியது. சர்வதேச நாடுகளிடம் இந்தியாவுக்கு, எதிராக பாகிஸ்தான் புகார் தெரிவித்தது. இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என மற்ற நாடுகளும் கைவிரித்துவிட்டன.

 

இதனால் காஷ்மீரில் மீண்டும் தீவிரவாதத்தை தூண்டும் முயற்சியில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் ஏராளமான தீவிரவாதிகள், காஷ்மீருக்குள் நுழைய காத்திருந்தனர். இவர்களை இந்தியாவுக்குள் ஊடுருவ வைப்பதற்காக எல்லையில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி துப்பாக்கி சூடு சம்பவத்தில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். இதில் காஷ்மீரின் குப்வாரா பகுதியில் தங்தர் பகுதியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள் 2 பேர் உட்பட 3 பேர் பலியாயினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நீலம் பள்ளத்தாக்குதல் பகுதியில் உள்ள 4 தீவிரவாத முகாம்களை நோக்கி, இந்திய ராணுவத்தினர் நேற்று பீரங்கி தாக்குதல் நடத்தினர். இதில் பாகிஸ்தான் வீரர்கள் 6 பேர் பலியாயினர். இது குறித்து இந்திய ராணுவ செய்தி தொடர்பாளர் அளித்த பேட்டியில், ‘‘பாகிஸ்தான் ராணுவ தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினர் பீரங்கி தாக்குதல் நடத்தினர். இதில் பாகிஸ்தான் தரப்புக்கு பலத்த சேதம், உயிரிழப்பும் ஏற்பட்டது’’ என்றார்.

காஷ்மீர் பாஜ வரவேற்பு: காஷ்மீர் பா.ஜ தலைவர் ரவீந்தர் ரெய்னா நேற்று அளித்த பேட்டியில், ‘‘பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் குப்வார பகுதியில் ராணுவ வீரர்களும், அப்பாவி நபரும் பலியாயினர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம்’’ என்றார். 3வது சர்ஜிக்கல் ஸ்டிரைக்: காஷ்மீரில் உள்ள உரி ராணுவம் முகாம் மீது கடந்த 2016 செப்டம்பர் 18ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 வீரர்கள் பலியாயினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்திய ராணுவத்தினர் எல்லை தாண்டிச் சென்று தீவிரவாத முகாம்கள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் துல்லிய தாக்குதலை நடத்தினர். இதில் 35 முதல் 70 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டனர். ஆனால், இதுபோன்ற தாக்குதல் நடக்கவே இல்லை என பாகிஸ்தான் மறுத்தது. அதன்பின் நடத்தப்பட்ட பாலகோட் விமான தாக்குதல் 2வது சர்ஜிக்கல் ஸ்டிரைக் என அழைக்கப்பட்டது. ஆனால், தற்போது எல்லை தாண்டாமல் பீரங்கி மூலம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்துள்ளது. இதனால், இது 3வது சர்ஜிக்கல் ஸ்டிரைக்காக கருதப்படுகிறது.

எதிரிகளுக்கு கடும் சேதம்

எல்லையில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ராணுவ தளபதி பிபின் ராவத் கூறுகையில், ‘‘இந்திய ராணுவம் கொடுத்த பதிலடி தாக்குதலில், எல்லை கட்டுப்பாட்டு பகுதிக்கு அப்பால் உள்ள 3 தீவிரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. 4வது முகாம் பலத்த சேதமடைந்துள்ளது. எங்களுக்கு கிடைத்துள்ள தகவல்படி பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 6 பேர் முதல் 10 பேர் வரை பலியாகி இருக்லகாம் என தெரிகிறது. இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் விளக்கியுள்ளோம். பாகிஸ்தான் மீதான தாக்குதலில் அரசியல் தலைமையும், ராணுவமும் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.’’ என்றார்.

Related Stories: