பாக். பயங்கரவாதிகளின் 4 முகாம்கள் அழிப்பு: அமைதியை சீர்குலைக்க செய்யும் ஊடுருவலை தடுக்க பதிலடி...ராணுவ தளபதி பேட்டி

டெல்லி: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவு நீக்கியதை தொடர்ந்து அங்கு வன்முறையை ஏற்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. அதற்காக பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவ செய்ய திட்டம் வகுத்து   அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எல்லையில் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி அந்நாட்டு ராணுவம் தேவையற்ற தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாகிஸ்தான்   ராணுவத்தினர் இன்று காலை அத்துமீறி நடத்திய தாக்குதலில் 2 இந்திய வீரர்களும், குடிமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர்.

Advertising
Advertising

இந்நிலையில், பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அங்குள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். குப்வாரா மாவட்டத்தின் தங்கார் பகுதியின்   எல்லையோரம் அமைந்துள்ள பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்தியாவிற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் உதவுவதை முறியடிக்கும்   வகையில் இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு உள்ள நீலம் பள்ளத்தாக்கில் செயல்பட்ட 4 தீவிரவாத முகாம்கள் இந்திய தாக்குதலில் தகர்ந்தன.

இதற்கிடையே, காஷ்மீரில் இந்திய ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து ராணுவ தளபதி பிபின் ராவத்துடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், செய்தியாளர்களிடம்  பேட்டியளித்த ராணுவ தளபதி பிபின் ராவத், காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் முகாம்களை இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி அழித்தது குறித்து விளக்கமளித்தார்.  

அப்போது, காஷ்மீரில் 370 ஆவது சட்டப்பிரிவை நீக்கியதை தொடர்ந்து மாநிலத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்காக, எல்லை தாண்டி பயங்கரவாதிகள் முகாம்களை அமைத்து ஊடுருவ முயற்சித்து வருகின்றனர்.  இந்நிலையில் அதனை தடுக்கவே எதிர்தாக்குதல் நடத்த வேண்டிய கட்டாய நிலையில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 10 பேரும் பயங்கரவாதிகள் பலரும் பலியாகினர் என்றார்.

மேலும், பல பயங்கரவாதிகள் காயமடைந்திருக்கலாம். இந்த ராணுவத்தாக்குதலில் எல்லையில் பயங்கரவாதிகளின் 4 முகாம்களை அழித்துள்ளோம். காஷ்மீரில் இயல்புநிலை திரும்பும் நிலையில் அமைதியை சீர்குலைக்க செய்யும் இத்தகைய  ஊடுருவலை தடுக்க தக்க பதிலடி கொடுப்போம் என்றார். மேலும் அவர் கூறுகையில் எல்லைப்பகுதியில் நிகழும் உண்மை சம்பவங்களை பாகிஸ்தான் மறைக்கிறது. என்றார். பாகிஸ்தான் அரசு இந்த தாக்குதல் குறித்து எந்த அறிக்கையும்  விடாமல் அமைதி காத்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

Related Stories: