ஐந்தாவதும் பெண் குழந்தை பிறந்ததால் முத்தலாக்: கணவர் மீது மனைவி போலீசில் புகார்

சம்பல்: உத்தரபிரதேசத்தில் ஐந்தாவதாக பெண் குழந்தை பெற்ற பெண்ணை, அவரது கணவர் தொலைபேசியில் முத்தலாக் கூறியதால், பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார். திருமணமான முஸ்லிம் ஆண், தன்னுடைய மனைவியை மூன்று தடவை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு  தடை செய்யும் மசோதா சமீபத்தில் கொண்டு வரப்பட்டது. அதன்படி, ஒரே நேரத்தில் 3 தடவை ‘தலாக்’ சொல்லி  விவாகரத்து செய்வது செல்லாது; சட்ட விரோதமானது என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.  இதனை மீறி செயல்படும் ஆணுக்கு 3 ஆண்டுகள்வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர், சமீபத்தில் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். வெளியூரில் இருக்கும் அவரது கணவர், அந்த பெண்ணின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு  அவருக்கு முத்தலாக் கூறியுள்ளார்.இதுகுறித்து, செய்தியாளர்களிடம் அந்த பெண் கூறுகையில், ‘‘கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் கமீல் என்பவருடன் எனக்கு திருமணம் நடந்தது.  எனக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.  சமீபத்தில் 5வதாக எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.  இந்த செய்தியை அறிந்த எனது கணவர், எனக்கு முத்தலாக் கொடுத்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் அளித்துள்ளேன்’’ என்றார். இவ்விவகாரம் தொடர்பாக, கமீலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: