ஆவடி விமானப்படை கடிதம் எதிரொலி: பம்மதுகுளம் பகுதியில் நில பத்திரப்பதிவு திடீர் நிறுத்தம்...பொதுமக்கள் கடும் அதிர்ச்சி

புழல்: ஆவடி விமானப்படை கொடுத்துள்ள கடிதம் எதிரொலியாக பம்மதுகுளம் பகுதியில் பத்திரப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.சென்னை செங்குன்றம் அருகே பம்மதுகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈஸ்வரன் நகர், கணபதி நகர் பகுதிகளில் 1200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இதில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள்  கட்டப்பட்டுள்ளது. இந்த இடத்துக்கு முறையான  பத்திரப்பதிவு நடந்துள்ளது. பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த மே மாதம் ஆவடி விமானப்படை அலுவலகத்தில் இருந்து பத்திரப்பதிவு  அலுவலகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.

 அந்த கடிதத்தில், ‘’பம்மதுகுளம், நாவலூர், ஆட்டந்தாங்கல், அலமாதி கிராமங்களில் உள்ள ஒரு  சில குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள நிலங்கள் விமானப்படைக்கு சொந்தமானது. அந்த இடத்தை பத்திரப்பதிவு செய்ய வேண்டாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக விமானப்படை குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள  நிலத்துக்கு பத்திரப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஏற்கனவே இந்த இடத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்டு முறையான பட்டா  வாங்கியவர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பம்மதுகுளம், ஈஸ்வரன் நகர், கணபதி நகர் பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் தவித்து  வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘’பம்மதுகுளம் பகுதியில் குறிப்பிட்ட சர்வே நம்பரில் விமானப்படைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே அறிவிப்பு கொடுத்துள்ளனர். தற்போது அவர்கள் கொடுத்துள்ள  சர்வே எண்ணில் உட்பிரிவு குறிப்பிடாமல் முழு சர்வே எண்ணையும் பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்குமாறு கடிதம் அளித்துள்ளனர். இதனால் விமான படைக்கு சொந்தமான நிலத்திற்கும் தங்கள் நிலத்திற்கும் எந்த தொடர்பும்  இல்லாதபோதும் எங்கள் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். இதனால் சுமார் 700 கோடி மதிப்பிலான பொதுமக்களின் சொத்துக்கள் முடங்கியுள்ளது. இது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம், படிப்பு உள்பட அவசர தேவைக்கு கூட நிலத்தை விற்க முடியாமல் தவித்து வருகிறோம். இதுகுறித்து ஆவடி வருவாய் துறை, மாவட்ட ஆட்சியர் என சம்மந்தப்பட்ட அனைத்து துறைக்கும் புகார் அளித்தும் எந்தவொரு  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனிமேலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் போராட்டம் நடத்துவது தவிர வேறு வழியில்லை’ என்றனர்.

Related Stories: