சிவகங்கை மாவட்ட புறநகர் சாலை விரிவாக்கப்பணிக்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டி சாய்ப்பு

* மழை வளம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் * மாற்று இடத்தில் மரங்கள் நட மக்கள் வலியுறுத்தல்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் புறநகர் சாலை விரிவாக்க பணிக்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வறட்சி பாதித்துள்ள மாவட்டத்தில் மரங்கள் வெட்டி அழிக்கப்படுவதால், மழை வளம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, மரத்தை வேரோடு பிடுங்கி வேறு இடங்களில் மீண்டும் நட்டு வைத்து, பராமரிக்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது. புதிய சாலை போடும் பணிக்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்ட நிலையில் அதற்கு பதிலாக புதிய மரக்கன்றுகள் நடாததால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நீதிமன்றங்கள் அறிவுறுத்தியும் இதை யாருமே கண்டுகொள்வதில்லை என்பதுதான் வருத்தமான விஷயம். வளர்ச்சிக்கு போக்குவரத்து இன்றியமையாத ஒன்றாகி விட்டது. மற்ற போக்குவரத்துக்களைவிட சாலை வழி போக்குவரத்திலேயே ஏராளமான பொருட்கள் ஒரு இடத்தில் இருந்து, மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. போக்குவரத்து நெருக்கடி, பயண நேரம் என அனைத்திற்கும் சாலை வசதி முக்கியமானதாக உள்ளது. சாலை வசதிக்காக மரங்களை அகற்றும்போது அதற்கு பதில் மாற்று மரங்களை நட வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யப்படுவதில்லை.

மதுரை, தொண்டி சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்ட பிறகு, கடந்த 2012ம் ஆண்டு முதற்கட்டமாக திருப்புவனம் அருகிலிருந்து, காளையார்கோவில் அருகே ஆண்டிச்சியூரணி வரையும், பின்னர் 2013ம் ஆண்டு ஜனவரியில் ஆண்டிச்சியூரணியிலிருந்து, தொண்டி வரை புதிய சாலை போடும் பணி நடந்தது. இதுபோல் திருவாரூரில் இருந்து திருப்பத்தூர், சிவகங்கை வழி மானாமதுரை வரையிலான சாலை விரிவாக்கப்பணி நடந்து முடிவடைந்துள்ளது. மதுரையிலிருந்து மானாமதுரை, திருப்புவனம் வழி ராமேஸ்வரம் வரையிலான சாலை விரிவாக்கப்பணி நடந்து வருகிறது. மேலும், பூவந்தியில் இருந்து மதுரை வரையிலான சாலை விரிவாக்கப்பணி நடந்து வருகிறது. திருச்சியில் இருந்து காரைக்குடி, தேவகோட்டை வழி ராமேஸ்வரம் செல்லும் சாலை என புதிய சாலைப்பணிகள், சாலை விரிவாக்க பணிகள் என சிவகங்கை மாவட்டம் வழியாக பல்வேறு சாலைப்பணிகள் நடந்து முடிந்துள்ளன. தற்போதும் சில சாலைப்பணிகள் நடந்து வருகின்றன.

ஏற்கனவே இருந்த சாலைகளின் இரு புறத்திலும் புங்கை, செங்காந்தல், பனை, வேம்பு, கருவேலம், அரசு, புளியமரம், பூவரசு, ஆலமரம், அரச மரம் உள்ளிட்ட பலவகையான மரங்கள் இருந்தன. இந்த மரங்கள் அனைத்தும் சாலைப்பணிகளுக்காக வேருடன் அகற்றப்பட்டன. சாலையை அகலப்படுத்தும்போது, பிடிமானத்திற்காக இருபுறமும் சுமார் ஐந்தடி நீளத்திற்கு சுத்தம் செய்யப்பட்டு மண் கொட்டப்படுகிறது. இதனால் இந்த இடத்திற்குள் இருக்கும் மரங்களும் அகற்றப்படுகின்றன. இவ்வாறு சிவகங்கை மாவட்ட எல்லைக்குள் மட்டும் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன. இதில் 80சதவீத மரங்கள் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள பழமையான மரங்களாகும். சாலையின் இரு புறத்திலும் மண் அரிப்பை தடுத்து சாலையின் பிடிமானமாக இம்மரங்கள் காணப்பட்டன. சாலை விரிவாக்க பணிக்கு மரங்கள் வெட்டப்படும் வாய்ப்பை பயன்படுத்தி சாலையின் அருகே ஆனால் சாலை விரிவாக்க பணிக்கு தொடர்பில்லாத மிகப்பெரிய அளவிலான மரங்களை சமூக விரோதிகள் வெட்டி கடத்தி செல்வதும் நடந்து வருகிறது. மதுரை, தொண்டி சாலை விரிவாக்கப்பணிக்கு வெட்டப்பட்ட மரங்களுக்கு பதில் புதிய மரக்கன்றுகள் சில இடங்களில் மட்டும் நடப்பட்டன. அவைகள் பராமரிப்பின்றி வளராமல் காய்ந்து போனது.

திருவாரூர், மானாமதுரை சாலை விரிவாக்கப்பணிக்கு வெட்டப்பட்ட மரங்களுக்கு பதில் இதுவரை ஒரு மரக்கன்று கூட நடப்படவில்லை. சாலை விரிவாக்கப்பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்படும்போது, மரங்கள் அகற்றப்படுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. அப்போது ஒரு மரத்தை அகற்றினால் அதற்கு பதில் 10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்பட வேண்டும் என ஒப்புதல் பெறப்பட்டு அதன் பின்னரே நடை முறை பணிகள் தொடங்கப்படுகிறது. ஆனால் அதன் பின்னர் அதை யாரும் பின்பற்றுவதில்லை. மாவட்ட, மாநில, தேசிய நெடுஞ்சாலை என அனைத்திலும் இதே நிலைதான்.

முன்பு சாலைப்பணியாளர்களால் மரங்களும் பராமரிக்கப்பட்டன. ஆனால் தற்போது அவ்வாறு செய்யும் நிலை இல்லை. தேசிய, மாநில அளவிலான சாலைகளில் மரம் நடுவது, பராமரிப்பது குறித்து மாவட்ட அதிகாரிகள் கேள்வி எழுப்புவதில்லை. அவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டிய நிலை உள்ளது. டூவீலரில் பயணிப்பவர்கள் ஓய்வெடுக்கவும், அனைத்து வாகனங்களில் பயணம் செல்பவர்களுக்கு அதிக வெப்பம் தாக்காதபடியும் சாலையோர மரங்களே தடுத்தன. மழை மற்றும் இயற்கை வளத்தை பாதுகாக்கும் வகையில் இருந்த இந்த மரங்கள் வெட்டப்பட்டதால், தற்போது அனைத்து இடங்களிலும் அதிகப்படியான வெப்பம் நிலவுகிறது. சாலையோரத்தில் மரங்கள் இல்லாததால் சாலைகளில் செல்லும்போது அனல் காற்று வீசுகிறது. மரங்கள் இல்லாத சாலைகளால், கோடை காலங்களில் பகல் நேரங்களில் சாலைகளில் செல்வதையே தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: